பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இத்தகைய முறைகளைக் கந்தர் அலங்காரத்திலும் காணலாம்.

கந்தர் அலங்காரத்தில் ஒரு கருத்தை அழகுபடச் சொல்வதற்குப் பலபல முறைகளை ஆளுகிறார் அருணகிரியார். அவர் அருட்புலவர். அருளநுபவமும் புலமையும் ஒருங்கே வாய்த்தவர். அருளநுபவத்தை உணர்ச்சி வசப்பட்டு, "நான் எவ்வாறு சொல்வேன்!" என்று வியப்புக்குறி போடும்போது காணலாம். புலமையை அவர் கருத்தை அமைக்கும் முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். உருவகம், உவமை, உயர்வு நவிற்சி முதலிய அலங்காரங்கள் கந்தர் அலங்காரத்தில் அழகாக அமைந்துள்ளன.

கந்த புராணத்தில் முருகனுடைய திருவவதாரம் முதல், வள்ளியம்மை திருமணம் வரையில் பல வரலாறுகள் இருக்கின்றன. அதிற் கண்ட வரலாறுகளோடன்றி முருகனைப் பற்றிய வரலாறுகள் வெவ்வேறாகப் பழங்கால முதல் வழங்கி வருகின்றன. இராமாயணம், பாரதம், வடமொழிக் கந்த புராணம், குமார சம்பவம் என்னும் வடநூல்களில் முருகனைப் பற்றிய வரலாறுகள் வருகின்றன. அவை யாவும் ஒரே மாதிரி அமைந்தவை என்று சொல்ல இயலாது. பல வேறுபாடுகள் இருக்கும். ஒன்றில் காணப்பெறாத புதிய செய்திகள் வேறு ஒன்றில் இருக்கும். அப்படியே திருமுருகாற்றுப் படை, பரிபாடல் முதலிய பழந்தமிழ் நூல்களிலும் கந்த புராணத்தில் இல்லாத கதைகள் இருக்கும்.[1]

அருணகிரிநாதர் வாக்கிலும் பல புதிய வரலாறுகளைக் காணலாம். முருகனையும் அவனைச் சார்ந்துள்ள பொருள்களையும் பற்றிய தத்துவங்களை அவர் பல இடங்களில் விளக்குகிறார். அவனுடைய ஆறுமுகக் கோலம் அநாதியானது என்றும் அவன் மயில் ஓங்கார உருவமுடையதென்றும் அவனைச் சிவபெருமான் வணங்கினார் என்றும் வள்ளியெம்பெருமாட்டியை வணங்கிப் பாதம் வருடினார் என்றும் அவர் கூறும் செய்திகள் புராணத்தில் காணப்படுவதில்லை. ஆனாலும் முருக்ன் அருளில்


240

  1. 'பெரும் பெயர் முருகன்' என்னும் புத்தகத்தில் "எது சரி?" என்ற கட்டுரையில் இந்த வேறுபாடுகளைப் பற்றி ஆராய்ந்திருக்கிறேன்.