பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பிறர் துன்பத்தைக் காண்பது என்ற கருணையே நமக்கு இல்லை. கண்ட பிறகு அல்லவா நம் உள்ளத்தில் கருணை வளர வேண்டும்? கண்டாலும், "அவன் துன்பத்தை அநுபவித்தால் அநுபவிக்கட்டுமே; அவன் விதி; அவன் அந்தத் துன்பத்தைப் படத்தான் வேண்டும்" என்று சொல்பவர்களைப்போல் அல்லாமல், "அவன் துன்பப்படுகிறானே" என்று இரங்க வேண்டும். இரங்குவதோடு மட்டுமல்லாமல் அவனது துன்பத்தை நாமே ஏற்றுக்கொண்டு அதை நீக்குவதற்கு முயல வேண்டும். இதுவே கருணையின் வடிவு.

அருணகிரிநாதப் பெருமான் பாமர மக்களைப்போலவே உயிர் வாழ்ந்து, பிறகு இறைவனின் திருவருளில் மூழ்கித் திளைத்து அன்பு உள்ளத்துடன் வாழ்ந்தார். அதோடு மாத்திரம் நிற்கவில்லை. அந்த மக்கள் படுகின்ற துன்பங்களை எல்லாம் கண்டு இரங்கினார். அதோடும் நிற்கவில்லை. அவர்கள் படும் துன்பங்களைத் தாமே படுவதாக நினைத்தார். "ஆண்டவனே, நான் படுகின்ற இந்தத் துன்பம் போதாதா? இதை நீக்கி இன்பம் அருள மாட்டாயா?" என்று பாடினார். பிறருக்காகப் பாடிய பாடல்கள் இவை. "நான் இந்தத் துன்பத்தை அடைந்தேன்" என்று அவர் சொல்வன எல்லாம் அவருடைய கருணைப் பிரவாகத்தைக் காட்டுகின்றன.

அருணகிரிநாதர் இப்படிப் பாடுகின்ற பாட்டை நினைந்து, 'கருணைக்கு அருணகிரி என்று அந்தப் புலவர் பாடியிருக்கிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. 'கருணைக்கு அருணகிரி' என்றது அவர் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியை மாத்திரம் குறிப்பது அன்று. அவர் இயற்றிய திருப்புகழ், கந்தர் அலங்காரம் முதலிய நூல்கள் மக்கள் வாழ்கின்ற காலமெல்லாம் அவர்களுடைய குறைகளை இறைவனிடம் முறையிடுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றன. ஆகவே அருணகிரிநாதருடைய கருணை இன்று வரையில் பயன்படுகிறது; இனியும் பயன்படும்.

அன்பு வித்து

னிதன் தன் உள்ளத்தில் தோன்றுகின்ற தீய உணர்ச்சிகளை எல்லாம் காட்ட வார்த்தைகளை நிரம்பக் கற்றுக் கொண்டிருக்கிறான். அதுவும் இந்தக் காலத்தில் பிரசங்க மேடைகளிலும்,

16