பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை

ஊறிய அவர் கூறுவன ஏற்றுக் கொள்வதற்கு உரியனவே. அப்படியெல்லாம் நடந்தனவா என்று கேட்பதற்கு நாம் யார்? "இல்லை, இல்லை; அப்படி நடக்கவில்லை" என்று சாட்சி கூறும் தகுதிதான் யாருக்கு இருக்கிறது? புலமை மிக்க கவிஞர்கள் தம்முடைய கற்பனையால் உலக நிகழ்ச்சிகளையே வேறு வகையாகக் காட்டும் உரிமை படைத்திருக்கிறார்கள். அவற்றைக் கவி ஸமயம் என்றும் புலவர் மரபு என்றும் கூறுவர். அவ்வாறே இறைவனிடம் முறுகிய பக்தி கொண்டு அவனுடைய திருவருளால் அநுபவ எல்லையிலே சஞ்சரிக்கும் பெரியார்களுக்குத் தம் உள்ளத்தில் விஞ்சியிருக்கும் உணர்ச்சியால் எழும் கற்பனைகளைச் சொல்ல உரிமை உண்டு. புலவர்களுடைய கற்பனைகளைப் பரிவும் கவியுணர்ச்சியும் கொண்டு பார்த்தால் அவற்றின் சுவையை உணரலாம். அருணகிரிநாதரைப் போன்ற அருட் புலவர்களின் வாக்குகளை நுகர்வதற்குப் பரிவு, கவியுணர்ச்சி என்ற இரண்டோடு பக்தியும் வேண்டும். அப்போதுதான் நன்றாக உணர்ந்து அநுபவிக்க முடியும்.

இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரத்தில் உள்ள ஆறு பாட்டுக்களுக்குரிய விளக்கம் இருக்கிறது. முதல் மூன்று பாடல்களும் அருணகிரியார் தாம் பெற்ற அநுபவத்தை எண்ணி எண்ணி வியக்கும் நிலையிலே பாடியவை. இவை மூன்றிலும் அருணகிரியாரை அருட்கடலில் மூழ்கிக் களிக்கும் அநுபவியாகவே பார்க்கிறோம். "ஆனந்தத் தேனை, வெறும் பாழைத் தெளிய விளம்பியவா!" என்றும், "உபதேசித்தது ஒன்று உண்டு, கூறவற்றோ?" என்றும் "சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனை விட்டவா!" என்றும் அவர் சொல்லும்போது தாம் உண்ட இனிய விருந்தின் இனிமையைச் சொல்ல முடியாமல் ஏப்பம் விட்டுக் காட்டுபவரைப்போலத் தோற்றுகிறார். வியந்து நிற்பதும், சொல்ல இயலாதென்று சொல்வதும் அவருடைய உணர்ச்சிச் சிறப்பைப் புலப்படுத்துகின்றன.

"ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத்து உச்சியின்மேல், அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை" என்னும்போது புலமை நிலையில் நின்று உருவகம் செய்து காட்டுகிறார். உடனே, "அநாதியிலே வெளியில் விளைந்த வெறும்

241