பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஆனந்தத் தேன்

அநுபவமும் வியப்பும்

முருகவேளின் வெற்றிப் பிரதாபத்தைப் பேய்களின் விளையாட்டு மூலமாக உணர்த்தினார் அருணகிரிநாதர். பழைய மரபைப் பின்பற்றி முருகன் போர்க்களத்திலே வென்று களவேள்வி செய்த செய்தியைச் சொன்னார். பிறகு, என்னுடைய மனமயக்கத்தைத் தீர்த்தருள வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். நம்முடைய பிரதிநிதியாக இருந்து நாம் செய்ய வேண்டிய விண்ணப்பத்தை அவர் செய்தார். ஆண்டவனுடைய திருவருளால் இன்ப அநுபவத்தைப் பெற்றவர் அவர். கந்தர் அலங்காரத்தில் முதல் பாட்டிலேயே, "பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று அந்த அநுபவத்தை எடுத்துச் சொன்னார். மேலும் பல பல பாட்டுக்களில் தம் அநுபவத்தைப் பேசுகின்றார். அப்படிச் சொல்கிற பாட்டு ஒன்றை இப்போது பார்க்கலாம்.

ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேல்
அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியைத்
தெளிய விளம்பிய வாமுகம் ஆறுடைத் தேசிகனே!

"முருகன் ஆறுமுக நாதனாகிய பரமகுரு. அவன் எனக்குச் செய்த உபதேசத்தின் பெருமையை என்ன என்று சொல்வேன்!" என்று ஆச்சரியப்படுகிறார் அருணகிரியார். மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவன் உயர்ந்த நிலைக்கு ஏறிக் கீழே உற்று நோக்கினால் ஆச்சரியம் உண்டாகும். தரையில் இருந்தவன் மலை உச்சிக்குப் பறந்து போய்விட்டான் என்றால், அங்கிருந்து தரையை நோக்கும் போது பேராச்சரியம் உண்டாவது இயல்பு தான். அருணகிரியார் ஆச்சரியப்படுகின்ற பல பாடல்களைக் கந்தர் அலங்காரத்தில் பார்க்கலாம்.