பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனந்தத் தேன்

"ஆறுமுகமுடைய தேசிகன், குருநாதன் எனக்கு என்ன எல்லாம் காட்டினான் தெரியுமா?" என்று தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்ல வருகிறார். முதலில் அந்த அநுபவத்தை இனிமையுடைய தேனாகச் சொல்கிறார்.

மலையின் தோற்றம்

ருவன் ஒர் ஊருக்குச் சென்றான். நட்ட நடு இரவில் பன்னிரண்டு மணி நேரத்தில் சென்றான். இன்ன வீதி, இன்ன வீடு, இன்ன பொருள் என்ற அடையாளங்களே தெரியவில்லை. ஒரே கும்மிருட்டாக இருந்தால் எப்படித் தெரியும்? இரவு கழியட்டும் என்று அவன் பேசாமல் ஓர் இடத்தில் படுத்துக் கொண்டுவிட்டான்.

காலை ஆறு மணி ஆயிற்று. கொஞ்சம் தெளிவு உண்டாயிற்று. ஒளிப்பிழம்பான சூரியன் தன் செங்கதிர்களைப் பரப்பிக் கொண்டு கீழ்த் திசையிலே தோன்றினான். அப்பொழுது பார்த்தால் எதிரே உள்ள பொருள்கள் எல்லாம் தெரிந்தன. தான் தங்கியிருக்கும் இடம் தெரிந்தது; வீடு தெரிந்தது; மக்கள் எல்லாம் தெரிந்தார்கள். அவ்வளவு மாத்திரமா? அந்த ஊருக்கு மிக அருகிலேயே உள்ள ஒரு பெரிய மலை தோன்றியது. இரவில் அந்தப் பெரிய மலை தோன்றவில்லை. அந்த ஊரிலிருந்த குளம் குட்டைகளும் தோன்றவில்லை. ஒரே இருட்டாக இருந்ததுதான் காரணம். அந்த இருட்டு அவனுக்கு மிக உயர்ந்த மலையையும் காட்டவில்லை; மிகப் பள்ளமான குளத்தையும் காட்டவில்லை.

ஆனால் காலையில் சூரியன் ஒளி பரவிய மாத்திரத்திலே பொருள்கள் யாவும் இயற்கை உருவத்தோடு, நிறத்தோடு தோன்றின. பச்சைப் பசேல் என்று உள்ள வயற்காட்டைப் பார்த்தான். சோலைகளிலே பல வண்ணங்களோடு மலர்ந்திருக்கின்ற மலர்களைப் பார்த்தான். பள்ளமான குளங்களைப் பார்த்தான். மிக உயர்ந்திருக்கிற மலையையும் பார்த்தான். இரவு தான் படுத்து உறங்கிய இடத்தைப் பார்த்தான். "அடடா, மிக அழுக்கான இடத்திலே, ஒரு குட்டிச்சுவருக்கு அருகில் அல்லவா நாம் படுத்து உறங்கியிருக்கிறோம்?" என்றும் உணர்ந்தான். ஆடையெல்லாம் ஒரே புழுதி படிந்திருப்பதையும் கண்டு வெட்கப்பட்டான். நாம் படுத்திருந்த இடத்திற்கு மிக்க அண்மையில்

247