பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

பத்திரிகைகளிலும் கொள்ளை, கொலை, தீ, பகிஷ்காரம், வெறி' போன்ற வார்த்தைகள் கொப்புளிப்பதைப் பார்க்கிறோம். அன்புக்கு வார்த்தை பஞ்சமாகப் போய்விட்டது. தீய உணர்ச்சிகளின் விளைவுகளைச் சொல்லும் வார்த்தைகளே அளவுக்கு மிஞ்சி வளர்ந்து விட்டன. ஆனால் இறைவன் எல்லோருடைய மனத்திலும் நல்லுணர்ச்சிகள் உண்டாவதற்கும் வாய்ப்பு அளித்திருக்கிறான். மனத்தில் தீய உணர்ச்சி மாத்திரம் இடம் பெறும் என்பது இல்லை; நல்லுணர்ச்சியும் இடம் பெறும். தீய உணர்ச்சிகள் மனத்திற்குத் தெரிவது போலவே அன்பு உணர்ச்சியும் தெரியத்தான் தெரியும். தன் மனையாட்டியிடத்தில் காதல் கொள்ளத் தெரிந்தவன் மனத்தில் காதல் உணர்ச்சி நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பைப் பரவலாக விடுவது இல்லை. தன்னைச் சேர்ந்தோரிடத்தில் அன்பு செய்யத் தெரிந்த மனம் உலகத்து மக்கள் எல்லாரிடமும் அன்புகாட்டும்படி விரிவது இல்லை. தன் தாயிடத்தில் அன்பு பூண்ட ஒருவன் சமூகத்திலுள்ள எல்லாப் பெண்களையும் தாயாகப் பார்க்க முடியும்; அது இயல்போடு ஒட்டியதுதான். இறைவன் எல்லோருடைய மனத்திலும் அன்பை வித்தாக வைத்திருக்கிறான். புதியதாக அன்பு அவனுக்கு வர வேண்டியதில்லை. பிறந்தவுடனேயே தாயிடத்தில் அன்பு உண்டாகிறது. அந்த அன்பு மனத்திலே வித்தாக இருக்கிறது. ஆனால் அந்த வித்தானது முளைத்துக் கப்பும் கிளையுமாகப் படர்வது இல்லை. காரணம் அதற்கு ஏற்ற முயற்சி இல்லை.

வித்து இடாத மண்ணிலே என்னதான் எருப்போட்டு, நீர் ஊற்றினாலும் ஒன்றும் முளைக்காது. மனம் அத்தகையது அன்று. இறைவன் இயற்கையிலேயே மனிதன் மன்த்திலே ஒரு வித்தை நட்டிருக்கிறான். அந்த அன்பாகிய வித்தை முயற்சி நீர் ஊற்றி வளர்த்தால் கருணைக் கனி பழுக்கும்; அந்த உள்ளத்திலே அருள் சுரக்கும்.

அருள் நிலைக்கு உயர்தல்

பிறரிடத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தானே பறித்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு தன்மை. தன் பொருளைத் தானே அனுபவிக்க வேண்டும் என்று பற்றிக் கொண்டிருப்பது

17