பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனந்தத் தேன்

அவ்வாறே உலக மாயையில் சிக்கி இருக்கின்ற நம் புறக்கண்களுக்கும் உலகிலுள்ள பொருள்களின் உண்மை இயல்பு விளங்குவதில்லை. சூரியன் ஒளி கிடைத்த மாத்திரத்திலே உலகிலுள்ள பொருள்களின் நிறம், வடிவம் எல்லாம் தோன்றுவதுபோல, இறைவன் திருவருள் ஒளி கிடைத்துவிட்டால் நம் அகக் கண்களிலே உலகிலுள்ள பொருள்களின் உண்மைத் தத்துவம் விளங்கும். நமக்கு உலகம் இருண்டு கிடக்கின்றது. "இருள் தருமா ஞாலம்" என்கிறார்கள். ஆனால் சிலருக்கு உலகம் ஒளி மயமாக இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் இறைவன் அருளால் ஒளி பெற்றவர்கள்.

உலகை ஒளியுலகாகப் பார்க்க வேண்டுமானால் இறைவன் அருள் வேண்டும். அவ்வருளாளல் அகக்கண் பெற்றவர்களுக்கு நமக்குத் தோன்றாதன எல்லாம் தோன்றும். உலகத்திலுள்ள பொருள்கள் நமக்கு நிழற்படமாகத்தான் தெரிகின்றன. அவற்றுக்குள் இருக்கும் தத்துவங்கள் எல்லாம் அவர்களுக்கு நன்றாகப் புலப்படும். நமக்குத் தோன்றவில்லையே எனின், நாம் அறியாமையாகிய இருட்டுக்குள் கிடக்கின்றோம். சூரியனுடைய ஒளியினால் எப்படிப் புற இருள் நீங்கிப் போகின்றதோ, அதேபோல இறைவனுடைய திருவருள் கூட்ட உண்டாகும் ஒளியினால் அறியாமை இருள் விலகிப் போகும். பந்தபாசங்கள் எல்லாம் போய்விடும். அதற்கும் அப்பால் ஞான மலையின்மீது கொஞ்சம் கொஞ்சமாக ஏறினால் தத்துவங்கள் விரிந்துகொண்டே போகும். அந்தத் தத்துவங்களை இப்போது நம் கண்களினால் காண முடியாது. இறைவன் திருவருளினால் பெறப்படும் அறிவுக் கண்களுக்குத்தான் அவை புலப்படும்.

அருள் ஒளி

ழங்காலத்தில் ஒரு பாண்டியன் இருந்தான். வரகுண பாண்டியன் என்பது அவன் பெயர். சிவபிரானிடத்திலே அவன் மிகுந்த பக்தி உடையவன். இறைவன் அருளால் அகக்கண் பெற்றவன். ஒரு வேப்பமரம், பழுத்துக் குலுங்கியிருந்தது. பிறர் கண்களுக்கு வெறும் வேப்பம் பழங்களாகத் தோன்றின பொருள் அவன் கண்களுக்குச் சிவலிங்கங்களாகத் தோன்றினவாம். உடனே அந்த மரத்திற்கு அவன் விதானம் அமைக்கச் செய்து விட்டான்.

259