பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆனந்தத் தேன்

வேண்டும். நாம் ஒருவருடைய வீட்டுக்கு ஒர் ஆளின் துணை கொண்டு போகிறோம். அவன் நமக்கு அவருடைய வீட்டைக் காட்டத் துணையாக வருகிறான். அந்த வீடு வந்தவுடன், அந்த ஆள் நின்று கொண்டுவிடுகிறான். கூட்டிக் கொண்டு வந்தவனை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு நாம் அந்த வீட்டின் சொந்தக்காரனோடு உள்ளே போகிறோம். துணைக்கு வந்தவனையுமா உள்ளே கூட்டிக் கொண்டு போகிறோம்? இல்லை. நமக்குத் துணையாக இருப்பது அறிவு. அந்த அறிவின் துணை கொண்டு தத்துவமாகிற சாரலில் ஏறி மலையின் உச்சியை அடைந்து விட்டோம். அந்த இடத்திற்கு அப்பாலே அறிவுக்கு வேலை இல்லை. அறிவு நிற்க வேண்டிய இடம் அது. அதுவரையில்தான் அறிவு நமக்கு வழிகாட்டியாக வர முடியும். அதற்கு அப்பாலே அநுபவம் வரவேண்டும். அது எப்படி வரும்? அன்பு இருந்தால் வரும். அன்பு வராவிட்டால் இன்ப அநுபவம் நமக்குக் கிடைக்காது. அந்த அன்புப் பசைதான் நம்மை இறைவனோடு ஒட்டுகிறது.

எனவே, அறிவின் தலைநிலத்தில் நின்ற ஒருவனுக்கு அன்பு விளைந்தால் ஆனந்தத் தேன் வரும். அறிவு மலையின் அன்பு மரத்தில் அநுபவத்தேன் இருக்கிறது. "அன்பிலே விளைந்த முதிர்ந்த ஆனந்தத் தேன் நான் பெறும்படி, அநுபவத்திலே தெரிந்து கொள்ளும்படியாக, விளம்பியவாறு என்னே!" என்று ஆச்சரியப்பட்டுப் போகிறார் அருணகிரியார்.

தோழியும் மணப்பெண்ணும்

றிவு நிற்கின்ற இடத்திலே, அன்பு விளைகின்ற இடத்திலே, அநுபவம் தோன்றுகிறது. ஒரு பெண் தன் தலைவனோடு கூடி இன்பம் அநுபவிக்கின்ற கல்யாணம், அன்று அவளுடைய பரம ரகசியங்களை எல்லாம் அறிந்துள்ள தோழிகள் அவளைச் சுற்றிச் சூழ நின்று காலையிலிருந்து பரிகாசம் செய்கிறார்கள். இரவு வந்தது. நன்றாக அலங்கரிக்கப்பட்டுள்ள படுக்கை அறைக்குள் அவளை அழைத்துப் போகிறார்கள். தந்தை கூடத்திலேயே நின்றுவிடுகிறார். தாய் கொஞ்சதூரம் வந்துவிட்டு மறைந்து போகிறாள். தோழிகள் அவளோடு இன்னும் சிறிது தூரம் போகிறார்கள். அவர்களுக்குள் உயிர்த்தோழி படுக்கை அறை வரையிலும் வருகிறாள். ஆனாலும் அறைக்குள் அந்தப் பெண் ஒருத்திதான்

263