பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆனந்தத் தேன்

பார்க்கலாமா?' என்ற சந்தேகம் நமக்குத் தோன்றலாம். உண்மையில் அங்கே ஒன்றும் இல்லை. அவை யாவும் நமக்கு அகக்கண் இல்லாவிட்டால் தோன்றா. விளக்க முடியாத உருவற்ற பொருளை உருவம் கொடுத்து நமக்கு விளக்கினார் அவர். தாம் உணர்ந்த பொருளை பிறருக்கு உணர்த்துவதற்காக உருவகமாகச் சொன்னார். "இவை எல்லாம் உண்மை அல்ல. உனக்குப் புரிய வேண்டுமென்பதற்காக உன் மொழியில் சொன்னேன். அறியாமை இருளில் சிக்குண்டு கிடக்கிறவனுக்கு, அருள் ஒளியில் ஞான மலை தோன்ற, அதில் ஏறி ஆனந்தத்தேனை நுகர வேண்டுமென்று உருவகமாகச் சொன்னேன். அங்கு ஒன்றும் இல்லை" என்று பின்பு புலப்படுத்துகிறார்.

அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற
வெறுந்தனியை,

"நான் அடைந்த இன்பத்திற்குக் கால எல்லை இல்லை; அது அநாதி, ஆதி அற்றது. எந்தக் காலத்தில் அந்த ஆனந்தம் உண்டாயிற்று என்று தெரியாது. நான் அநுபவித்த இன்பத்தை பல காலமாகப் பல பெரியோர்களும் அநுபவித்தார்கள். இப்படி அநாதி காலமாக இருந்து வருகின்றது. அது."

"அது கால எல்லையைக் கடந்தது என்று சொல்லிவிட்டீர்கள்? அது விளைந்த இடம் எது?” என்று கேட்டால் அதற்கும் விடை சொல்கிறார்.

வெளியில் விளைந்தது

என்று. வெளி என்றால் ஆகாசம். "அதற்கு ஆதாரம் ஆகாசந்தான்" என்று சொன்னார். ஆகாசம் ஐந்து பூதங்களில் ஒன்று. ஆகாசத்திற்குள் நான்கு பூதங்களும் அடங்கி இருக்கின்றன. ஆனாலும் ஆனந்தம் என்பது இந்த ஆகாசத்திற்கும் மேல் இருக்கிற ஒன்று என்பதைக் காட்ட,

வெளியில் விளைந்த வெறும்பாழ்

என்று சொன்னார். பாழ் என்று சொன்னால் போதாது. நமது ஊரில் பாழ் வெளி இருக்கிறது என்றால் அந்தப் பாழ் வெளிக்கு அப்பாலே ஊர் இருக்கிறது என்று தெரியும். பாழுக்குப்

267