பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆனந்தத் தேன்

தனி. ஒரு தனி நாற்காலி என்றால், வேறு நாற்காலிகள் அங்கே இல்லை என்பது பொருளே தவிர மேஜை இல்லை, கண்ணாடி இல்லை, வேறு பொருள் ஒன்றுமே இல்லை என்ற பொருள் தோன்றாது. இங்கேயோ தன் இனப் பொருளும் இல்லை, வேறு இனப் பொருளும் இல்லை. அதைத் தெரிவிக்கவே, "வெறுந் தனியை" என்று சொன்னார்.

இப்படி, காலத்தினால் அளவிடற்கு அரியதான ஒன்றை, வெளியில் அடங்காத ஒன்றை, இட எல்லைக்கும் அப்பாற்பட்டு இருக்கின்ற வெறும் பாழை, அதனைப் பெற்ற வெறுந் தனியைத் தெரிந்துகொள்ளுமாறு விளம்பினவன் முருகன். அவன் எத்தகையவன்?

முகம் ஆறுடைத் தேசிகனே!

தேசிகன் என்றால் குரு. குருநாதன் ஆகிய அவனுக்கு அடையாளம் என்ன? யாருக்கும் இல்லாத அடையாளம் உண்டு அவனுக்கு. அவன் முகம் ஆறு உடையவன். தேசிகன் என்று பொதுவாகச் சொன்னால் அது யாரையும் குறிக்கும். முருகப் பெருமானையே குறிக்க, "முகம் ஆறுடைத் தேசிகன்" என்றார். சிவபிரான் ஐந்து முகம் உடைய தேசிகன். ஐந்து முகங்களினால் அவர் இருபத்தெட்டு ஆகமங்களைச் சொன்னார். குமரக் கடவுள் ஆறுமுகம் உடையவன். இந்த ஆறுமுகக் கடவுள் ஐந்து முகக் கடவுளுக்கே பிரணவ மந்திரோபதேசம் செய்தவன். அத்தகைய ஆறு முகம் உடைய குருநாதன் எனக்கு உபதேசம் செய்தான் என்றார் அருணகிரிநாதர். எதற்கு உபதேசம் செய்தான்? பொருளைத் தெரிந்துகொள்ள அல்ல என்கிறார். தெளிந்து கொள்ள என்கிறார். அறிவு என்பது நூல்களினாலே அறிவது. காலம், இடம், பூதம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற ஒரு பொருளை அறிவினாலே தெரிந்து கொள்வது இயலாத காரியம். அதுபவத்தினாலேதான் அது முடியும். அறிவுடையவர்கள் எல்லாம் அந்த ஆனந்தத்தை அடைவார்கள் என்று சொல்ல முடியாது. அறிவினாலே பல பல தத்துவங்களையும் அறிந்து, உணர்ந்து கடந்து செல்லலாம். ஆனால் அந்த அறிவு நழுவிய நிலையில், அன்பு கனியும்போதுதான் அந்த ஆனந்தத்தைப் பெற முடியும்.

சர்க்கரை இனிக்கும் என்பதை அறிவினாலே தெரிந்து கொள்ளலாம். அல்லது அதைப்போன்ற பல பொருள்களை

269