பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/279

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வள்ளிகோன் உபதேசம்

ஹிந்து மதம்

மது பாரத நாடு முழுவதும் அமைந்த ஒரு சமயத்தை ஹிந்து மதம் என்று சொல்கிறோம். நாம் சொல்கிறோம் என்று சொல்வதைக் காட்டிலும் மேல்நாட்டார் சொல்ல, நாம் சொல்கிறோம் என்று சொல்வதே பொருத்தம். அவர்கள்தாம் இந்தியா என்றும், ஹிந்து மதம் என்றும் சரித்திரத்தில் எழுதி இருக்கிறார்கள். 'ஹிந்து மதம் என்று ஒரு மதம் உண்டா? இந்தியா முழுமைக்கும் ஒரு சமயம் உண்டா? அப்படியானால் ஹிந்து மதத்திற்குப் பொதுவான தத்துவம் என்ன இருக்கிறது? என்று சிலர் கேட்கிறார்கள். ஹிந்து மதத்திற்குப் பொதுவாக ஏதாவது இலக்கணம் உண்டா என்பதைப் பார்க்கலாம். பொதுவான இலக்கணம் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவது என்றால், கோயிலுக்குப் போகாத யோகிகள் இந்து மதத்தில் இருக்கிறார்கள்; ஞான விசாரம் பண்ணுகின்ற முனிவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் கோயிலுக்குப் போவதில்லை. ஆகையால் கோயிலில் போய்க் கும்பிடுவது இந்து மதத்தின் பொதுக் கொள்கை என்று சொல்ல முடியாது. அப்படியானால் விபூதி பூசுவதை ஹிந்து மத அடையாளம் என்று சொல்லலாமா? நாமம் போடுகிறவர்கள் ஹிந்து மதத்தில் இருக்கிறார்கள். நாமம் போடுவதும் அப்படியே பொதுவான இலக்கணம் ஆகாது. வேஷ்டி கட்டாதவர்கள் ஹிந்து மதத்தினர் ஆகமாட்டார்கள் என்றால், 'பாண்ட்' போடுவது ஹிந்து மதத்திற்கு விரோதம் என்று எங்கும் சொல்லவில்லை. காது குத்துவது ஹிந்து மதத்தின் அடையாளம் என்றால், காது குத்தாமல் பல காலம் வாழ்கின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள். குழந்தைக்கு உபநயனம் செய்யும் போது காது குத்துவது என்ற வழக்கம் உள்ள குடும்பங்கள் இருக்கின்றன. ஆகவே காது குத்துவதையும் அடையாளமாகச்