பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/281

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வள்ளிகோன் உபதேசம்

சென்றாலும் மனிதன் தன் வாழ்நாளில் பெற வேண்டிய பயன் நான்கு என்று சொல்வார்கள். தென் குமரியில் தமிழ் பேசும் மனிதன் அந்த நான்கையே சொல்வான்; வடகோடியில் இருக்கிற வங்காளியும் அந்த நான்கையே சொல்வான். வடக்கே உள்ளவர்கள் 'தர்ம அர்த்த காம மோட்சம்' என்று சொல்வார்கள். தெற்கேயுள்ள தமிழன் அவற்றையே 'அறம் பொருள் இன்பம் வீடு' என்று சொல்வான். இவற்றை உறுதிப் பொருள் என்று சொல்வது வழக்கம். வடமொழியில் புருஷார்த்தம் என்பர். இந்த நான்கும் வாழ்க்கையின் பயனென்ற கொள்கை பொதுவானது என்று சொல்லலாம். பாரத நாடு முழுமைக்கும் உரியவை என்று சொல்கிற சட்டம் ஒன்று உண்டு. இந்த நான்கையும் சொல்லும் அந்தச் சட்டத்திற்கு வேதம் என்று பெயர். ஆகமம் பொதுவான நூல் அல்லவா என்று கேட்கலாம். ஆகமங்களில் வெவ்வேறு பிரிவு உண்டு. வைஷ்ணவ ஆகமம், சிவாகமம், தேவி ஆகமம் என்ற வகைகள் இருக்கின்றன. இந்தியாவிலுள்ள எல்லாச் சமயத்தினரும் மேற்கோளாகச் சொல்கின்ற நூல் ஒன்று உண்டானால் அது வேதம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுவார்கள். ராமானுஜர் வேதத்தை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். மத்துவாசாரியர் தம் மதத்திற்கு ஆதாரமாக வேதத்திலிருந்து மேற்கோள் எடுத்துக் காட்டியிருக்கிறார். சங்கரரும் வேதத்தைக் காட்டுகிறார். சிவஞானபோத உரைகளிலும் பொதுவான விஷயத்தைச் சொல்லும்போது வேதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார்கள். எத்தனை விதமான வழிகள் உண்டோ அத்தனைக்கும் மூலசட்டமாக இருக்கிற பொதுநூல் வேதம். இந்த நாட்டிலுள்ள எல்லாச் சமயங்களும் வேதத்தைத் தங்கள் சமயச் சட்ட நூலாகக் கொண்டமையினால் இந்த நாட்டின் மதம் ஒன்று என்று சொல்கிறோம்.

வைதிக மதம்

தற்கு ஹிந்து மதம் என்பது பேராக இருக்க முடியாது. சநாதன தர்மம் என்று இப்பொழுது சொல்கிறார்கள். பழங்கால முதல் இருப்பதனால் அப்படிச் சொல்கிறார்கள். உலகில் பழைய சமயங்கள் சில இருக்கின்றன. அதனால் சநாதனம் என்பது இதற்கென்றே அமைந்த பெயர் ஆகாது. இந்தியாவில் உள்ள

273