பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

சமயங்கள் அத்தனைக்கும் ஒரு பெயர் இருக்குமானால் வைதிகம் என்ற பெயரையே சொல்ல வேண்டும். அவை யாவும் வேதத்தை ஆதாரமாகக் கொண்டமையினால் வைதிக சமயம் என்ற பெயரைப் பெற்றன.

சுட்டாத வேதம்

பாரத தேசத்தில் எந்தப் பகுதியாக இருந்தாலும், எந்த மொழி பேசும் நாடாக இருந்தாலும், எந்த ஆசாரத்தை வைத்துக் கொண்டவர்களாக இருந்தாலும், வேதத்தை நம்பி, அதை மேற்கோளாக வைத்து தங்கள் தங்கள் சமயத்தை அமைத்துக் கொண்டவர்கள் ஹிந்துக்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கு புருஷார்த்தங்களும் எல்லோருக்கும் பொதுவானவை. இந்த நாட்டிலுள்ள எல்லா மொழிக்காரர்களுக்கும், எல்லாச் சமயத்தார்களுக்கும் பொதுவான ஒரு நூலாக இருக்கின்ற வேதம் என்ன சொல்கிறது? மனிதன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது; உலகம் எப்படி உண்டாயிற்று என்று சொல்கிறது; இறைவனைச் சுட்டிக் காட்டுவது இல்லை.

நடுத்தெருவில் ஒருவன் இருந்தால் அவன் என்று சொல்வோம். ஒரு பொருள் இருந்தால் அது என்று சொல்வோம். அது, இது, உது என்று மூன்றுவிதமான சுட்டுச் சொற்கள் இருக்கின்றன. பக்கத்தில் இருக்கிறதை இது என்றும், தொலைவில் இருக்கிறதை அது என்றும், மேலே இருப்பதை உது என்றும் சொல்வது வழக்கம். 'உது' என்ற சொல் தமிழ்நாட்டில் வழக்கொழிந்துவிட்டாலும், யாழ்ப்பாணத்தில் இன்னும் வழக்கில் இருக்கிறது. இறைவன் மனத்திற்கும் பொறிக்கும் அப்பால் இருப்பதால் அவன் என்று சொல்கிறோம். வேதம் அவனை எப்படிச் சொல்கிறது? அது என்று சொல்கிறது. வாக்கினாலே சுட்டிக்காட்ட முடியாதவன்; ஆகையாலே, 'அநுபவத்திலே நீயே கண்டுகொள்' என்று சொல்கிறது. அவனைச் சொல்லித் தெரிந்து கொள்ள முடியாது. அவனால் வரும் இன்பத்தையும் சொல்ல முடியாது.

"அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்"

என்கிறார் தாயுமானவர். வேதம் சொல் மயம். சொல்லுக்குள் அடங்காதவனை அதனால் சொல்ல முடியாது. சொல்ல முடியாவிட்டால் அதனால் என்ன பயன் என்று தோன்றும். நேரே

274