பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

எந்தப் பாத்திரத்தில் இருந்தாலும் பால் பாலாகத்தான் இருக்கும். ஆண்டவன் எந்த வேஷம் போட்டாலும், காம மயக்கம் உடையவன் போலத் தோன்றினாலும், அவன் பேரின்ப நலத்தையே வழங்குகிறான். எம்பெருமான் வள்ளி நாயகியிடம் காம மயக்கம் உடையவனைப் போல ஒடி வந்தாலும், அவளைத் தடுத்தாட் கொண்டு பேரின்பத்தையே வழங்கினான். இதைப் பலவிடங்களில் நினைப்பூட்டுகிறார் அருணகிரியார். இங்கே தமக்கு ஒன்று உபதேசித்தவன் வள்ளி மணாளன் என்று சொல்கிறார்.

தேன்என்று பாகுஎன்று உவமிக்
கொணாமொழித் தெய்வவள்ளி
கோன் அன்று எனக்குஉப தேசித்த
தொன்றுஉண்டு

வள்ளி குறமகளாக வளர்ந்தாலும் திருமாலின் மகளாதலின், தெய்வத் தன்மை உடையவள். ஒரு பெண்ணைச் சிறப்பிக்கும் போது அவள் குணத்தைச் சொல்லலாம்; அவள் அங்க நலங்களை வருணிக்கலாம். ஆனால் அங்க நலங்கள் மனிதர்களுக்கே உரிய சிறப்பல்ல. உள்ளம் என்பது மனிதர்களுக்கு இருப்பதுபோலவே மற்ற விலங்குகளுக்கும் இருக்கிறது. அவை நினைக்கின்றன; ஆனால் சொல்லத் தெரிவதில்லை. மனிதர்கள் சிறப்பு அடைவதற்குக் காரணம் உள்ளத்தில் இருப்பதை உரைக்கக் கூடிய சக்தி இருப்பதுதான். வள்ளிநாயகியின் சிறப்பைச் சொல்லவந்தவர் அப்பெருமாட்டியினுடைய மொழியின் இனிமையை எடுத்து உரைக்கிறார்.

மொழி இனிமை

ள்ளியெம்பெருமாட்டி தினைப்புனத்தைக காவல் செய்கிறாள். முருகன் மரத்தின் இடுக்கில் ஒளிந்து கொண்டிருக்கிறான். அவளது உடலும், உள்ளமும் அவனுக்குத் தெரியவில்லை. அவள் ஆலோலம் பாடிக் கொண்டிருக்கிறாள். அந்த இனிமையான மொழி அவன் காதில் விழுகிறது. "அடடா இவள் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. தேன் போன்றது, பாகு போன்றது என்று உவமித்துச் சொல்லொணாததாக அல்லவா இருக்கிறது?" என்று அவன் நினைக்கிறான்.

278