பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பெற்றவள் வள்ளி; அவள் தெய்வத் தன்மை பொருந்தியவள். முருகனே கும்பிடும் தெய்வம் அல்லவா?

அன்று

அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு.

ன்று என்பது அந்த நாள் என்று குறிக்கும் சுட்டுச் சொல். முன்னாலே ஒரு நாளைக் குறிப்பிட்டுப் பின்பு அன்று என்று சுட்டினால் இன்ன நாள் என்று தெரியும். இங்கே அருணகிரியார் எந்த நாளைக் குறிப்பிடுகிறார்? இதற்கு முன்னே இன்ன நாள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா? அப்படி ஒன்றும் இல்லை.

மூவகைச் சுட்டு

ங்கே கொஞ்சம் இலக்கணத்தைப் பார்க்கலாம். "ராவணனை அவன் கொன்றான்” என்றால் எவன் கொன்றான் என்பது நமக்குத் தெரியும். ராமன் ராவணனைக் கொன்றான் என்பது உலகு அறிந்த உண்மை. "அந்தக் காந்தி இருந்தாரே" என்றால் அந்த என்பது யாரைச் சுட்டுகிறது என்பது உலகத்திற்குத் தெரியும். அத்தகைய சுட்டுக்கு உலகறி சுட்டு என்று பெயர். "அவன் அன்றி ஓரணுவும் அசையாது" என்றால் அவன் என்பது "யாரைச் சுட்டுகிறது?" இறைவனைச் சுட்டுகிறது. இது உலகத்திற்குத் தெரியும். ஆகவே உலகறிச் சுட்டு.

"அன்றைக்கு ராவணனை ராமன் கொன்றான்" என்பதில் அன்று என்பது பழைய காலத்தைச் சுட்டுகிறது. "அந்தக் காலம்" என்பதில் வரும் அந்த என்பதும் அத்தகையதே. இது பண்டறிச் சுட்டு.

"என் கல்யாணத்தன்று" என்று ஒரு பெண் தோழி ஒருத்தியிடம் சொல்கிறாள். அந்தப் பெண்ணின் கல்யாணம் என்றைக்கு ஆயிற்று என்று உலகத்திற்குத் தெரியாது; அந்தத் தோழிக்கும் தெரியாது. இது உலகறி சுட்டும் அல்ல; பண்டறிச் சுட்டும் அல்ல. என்றைக்குக் கல்யாணம் ஆயிற்று என்பது அந்தப் பெண்ணின் மனத்திற்கு மாத்திரம் தெரியும். இதற்கு நெஞ்சறி சுட்டு என்று பெயர். "அன்று எனக்கு உபதேசித்தது" என்ற அருணகியார் கூறுவதில் உள்ள அன்று என்பது நெஞ்சறி சுட்டு. அவர் சுட்டும் நாள் அவர் நெஞ்சுக்குத்தான் தெரியும்.

282