பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/295

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வள்ளிகோன் உபதேசம்

தான், நான் என்று சொல்கின்ற பேத உணர்ச்சி இருக்கிற வரைக்கும் அநுபவம் இல்லை. இந்த இரண்டும் கெட்டாலன்றி அவன் அருளைப் பெற முடியாதாம். நான், நீ, தான் என்னும் மூன்றும் ஓர் இனச் சொற்கள் மூன்று இடங்களைக் குறிப்பவை. நான் என்பது தன்மை; நீ என்பது முன்னிலை; தான் என்பது படர்க்கை. பகல் என்று சொன்னால் இரவு இருக்கிறது என்பது குறிப்பால் தெரியும். வேண்டியவன் இருக்கிறான் என்று சொன்னால் வேண்டாதவனும் இருக்கிறான் என்று ஆகும். அதைப் போலவே, தான் என்று சொன்னால் நான், நீ என்பவற்றையும் நினைக்கச் செய்யும்.

முதலில் சொன்ன பஞ்சபூதங்களும் முன்னே உள்ள பொருள்கள்; முன்னிலைக்குச் சமமானவை. அவற்றினூடே வாழ்கின்ற நாம் தன்மை, இறைவன் அவன் என்னும் படர்க்கை. இந்த மூன்று இடங்களுக்கும் அப்பாற்பட்ட அநுபவத்தை அருணகிரிநாதர் பெற்றார். அவன் என்ற படர்க்கையாகக் காணாமல் பெற்ற அநுபவம் ஆதலால் தானும் அன்று என்றார்.

இப்படி அன்று, அன்று என, முன்னிலை, படர்க்கை, தன்மை என்பவற்றை மறுத்துவிட்டுக் கடைசியில் மிகச் சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறார். உருவம் படைத்த எதையும் உபமானமாகச் சொல்ல முடியாது; உருவம் இல்லாததையும் சொல்வது பொருந்தாது' என்று சொல்கிறார்.

அசரீரி அன்று, சரீரி அன்றே

சுட்டிக் காட்டலாகாத பொருளை எப்படிச் சொல்வது? வேதமே இது அன்று, இது அன்று என்று சொல்லும்போது அவர் எப்படிச் சொல்ல முடியும்? அவர் சொல்லவில்லை என்பதனால் அவருக்கு ஒரு குறைபாடு உண்டாகாது. அவர் சொல்லிவிட்டாரானால் அது அவர் அநுபவத்திற்கு ஒரு குறைபாடு. "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்பது அல்லவா வழக்கு? வேதத்தினால் சொல்ல முடியாத ஒன்றை இவர் சொல்லிவிட்டார் என்பதனால் அவர் அநுபவத்திற்குப் பெருமை ஏற்படாது; அவர் அநுபவம் சந்தேகத்திற்குரியது என்றே தோன்றும். எல்லாவற்றையும் நன்கு உணர்ந்துள்ள வேதம் சொல்வதைப் போலவே சொன்னார் இவர்; ஆகவே இவர் அடைந்த அநுபவம் சத்தியம் என்று தெரிகிறது.

287