பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/297

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சும்மா இருக்கும் எல்லை

அநுபவாதிசயம்

"து அன்று, இது அன்று" சொல்லிக்கொண்டே வந்து ஒரு பாட்டை முடித்துத் தொடர்ந்து அந்தப் பட்டில், "சொல்ல முடியாத தாயிற்றே அது!" என்று கூறுகிறார் அருணகிரியார். அந்த இன்ப அநுபவத்தைச் சொல்லத் தொடங்கி அப்படியே நிறுத்திவிட்டு, "ஆஹா!" என்று வியப்படைகிறார்.

ஒரு குழந்தை இறந்துவிட்டது. அக்குழந்தையின் தாயிடம் பலர் சென்று, "நேற்றுக்கூட விளையாடிக் கொண்டிருந்தானே! எப்படி இறந்தான்?' எனத் துக்கம் கேட்கிறார்கள். தாய், "நேற்றுக்கூட விளையாடிக் கொண்டுதான் இருந்தான்...உம், ஆ... சாயங்காலம்கூட நன்றாகப் பேசிக் கொண்டிருந்தான்... உம்.ஆ" என எல்லை மீறிய துக்கத்தினால் விஷயத்தைச் சொல்ல முடியாதவாறு இடை இடையே துன்பக் கொட்டாவி விடுவாள். எல்லை மீறிய இன்பம் அடைந்தவனும் இப்படித்தான் சொல்ல முடியாமல் திணறுவான். தாம் அடைந்த இன்ப அநுபவத்தைச் சொல்லும் அருணகிரியாருக்கு இடையிடையே வருகிறது அந்தக் கொட்டாவி. முதல் பாட்டிலேயே, "பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று இந்த அநுபவாதிசயம் வெளியாயிற்று. இப்போது பார்க்கப் போகும் பாட்டில், "சொல்லுகைக்கு இல்லை என்று எல்லாம் இழந்து சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல எனைவிட்டவா!" என்று ஆச்சரியம் ததும்ப வெளிப் படுகிறது கொட்டாவி. "விட்டவாறு என்னே!" என்று சொல்ல முடியாத இன்பத் திணறலைக் காண்கிறோம்.

சில அநுபவங்கள் சொல்ல முடியும்; கேட்டவர்களும் அநுபவிக்க முடியும். பழம் இனிக்கிறது என்று மாத்திரம் சொல்ல முடியும். எப்படி இனிக்கும் என்று ஒருவாறு சொல்ல முடியாது.