பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/299

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சும்மா இருக்கும் எல்லை

என்று அவர் கந்தர் அநுபூதியில் பாடுகிறார். "எல்லாம் அற என்னையும் இழந்த நலம் எப்படி எனச் சொல்லாய், முருகா" என்று கேட்கிறார். எல்லாம் இழந்ததை நலம் என்கிறார்.

பாயசம் சாப்பிட்ட குழந்தை, "அம்மா பாயசம் சாப்பிட்டேனே; அது எப்படி இருந்தது சொல்லம்மா" என்று தாயைக் கேட்பது போல இருக்கிறது இது. அதைச் சுவைத்ததிலே தான் அடைந்த இன்பத்தைக் குழந்தையால் சொல்ல முடிவதில்லை. "உலக இன்பத்தை நுகர்வதற்குக் கருவியாக இருக்கும் கருவி கரணங்களை எல்லாம் இழந்தேன். அவற்றை இன்னவாறு இழந்தேன் என்று சொல்லக்கூட முடியாத வகையில் என்னையும் இழந்து விட்டேன். என்னையே இழந்த பிறகு நுகர்ந்ததை உணரவும், சொல்லவும் நான் இல்லையே! நீ இருக்கிறாய். ஆகையால் நீதான் சொல்ல வேண்டும், முருகா!" என்று கேட்கிறார். எல்லாம் இழப்பதில் தன்னை இழந்ததும் அடங்கும்.

விழுப்புரம் ஸ்டேஷனில் நிறையக் கடைகள் வந்திருக்கின்றன என ஒருவர் கேள்விப்பட்டிருந்தார். ரெயிலில் போகும் போது விழுப்புரம் ஸ்டேஷனைப் பார்க்க வேண்டுமென்று எண்ணினார். ஆனால் சுகமாகக் காற்று வீசியதனால் தூங்கிப் போய்விட்டார். விழுப்புரம் தாண்டிய பிற்பாடுதான் விழித்துக் கொண்டார். அதனால் விழுப்புரம் ஸ்டேஷன் இன்னவாறு இருந்தது என்று அவரால் சொல்ல முடியவில்லை. அப்படி நான் என்ற ஒன்று எப்பொழுதும் விழிப்போடு இருந்தால், தான் அநுபவிக்கிற இன்பம் இன்னவாறு இருந்தது என்று சொல்லலாம். அருணகிரியார் அந்த நான் என்பதையும் இழந்துவிட்டார்; எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கிற நான் என்பதை இழந்த நிலையிலே ஜீவசாட்சியாக இருக்கிற ஒருவன் ஆண்டவன்தான்.

பிறவிப் பிணி

டலைப் பற்றியிருக்கிற நோய் நீங்கினால், உடலுக்கு இன்பம் உண்டு. நோய்க்கு இடம் கொடுக்கிற உடம்பு உண்டாவதே ஒரு நோய் அல்லவா? அதுதான் பிறவிப் பிணி. புழுக்கள், ரத்தம், சீழ் முதலியவை நிரம்பிய அசுத்தமான மலபாண்டமாகிய இது வருவது ஒரு நோய். ஜூரம், தலை வலி முதலானவை உடம்புக்கு வரும் நோய். பிறவி உயிருக்கு வரும் நோய்.

291