பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/301

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சும்மா இருக்கும் எல்லை

இல்லாமையினால் பிறவி நோய் இல்லை. மூன்று கரணங்களும் ஒருங்கே சும்மா இருக்க வேண்டும். ஒர் இடத்தைவிட்டு ஆடாமல் அசையாமல் இருப்பது உடம்பு சும்மா இருத்தல்; எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பது மனம் சும்மா இருத்தல்; எதைப்பற்றியும் பேசாமல் இருப்பது வாக்கு சும்மா இருத்தல். இந்த மூன்றும் மூவகை மோனம்.

சும்மா இருப்பது

ருணகிரியார், "சும்மா இருக்கும் எல்லையுள் செல்ல என்னை விட்டவாறு என்னே" என்று அதிசயப்படுகிறார். பல இடங்களில் அவர் இதைப் பற்றிச் சொல்கிறார். "சும்மா இருப்பது என்ன அவ்வளவு அருமையானதா? சும்மா எதுவும் பேசாமல் இருப்பவர்கள் சோம்பேறிகள் அல்லவா?" என்ற கேள்வி எழலாம்.

ஒர் ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் யாருடனும் எதுவும் பேசாமல் எப்பொழுதும் மெளனமாகவே ஒரு கோயில் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருக்கு அந்தக் கோயில் நிர்வாகிகள் ஒரு பட்டைச் சாதம் தினமும் கொடுப்பது வழக்கம். புது நிர்வாகி ஒருவர் வந்தார். கணக்குகளைப் பார்க்கும்போது, "சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை" என்று இருப்பதைக் கண்டார். அவருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. "சும்மா இருக்கிற சோம்பேறிகளுக்கு எதற்காகச் சோறு? இனி மேல் அந்தச் சாமியாருக்குச் சோறு கொடுக்கக்கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தார். சாமியாரிடம் மற்றவர்களுக்கு மரியாதை உண்டு. "அப்படிச் சொல்வது சரியல்ல" என்று அவர்கள் சொல்ல விரும்பினாலும் அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. மெல்ல நிதானமாக, "நீங்கள் அப்படி நினைக்கக் கூடாது. சும்மா இருப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. புலன் ஒடுங்கிய ஞானிகளுக்குத்தான் அது சாத்தியம். அவர் பெரிய ஞானி" என்று அதிகாரியிடம் ஒருவர் சொல்ல ஆரம்பித்தார். "சும்மா இருப்பது என்ன ஐயா அருமை? நான் இன்று முழுவதும் யாருடனும் பேசாமல் சும்மா இருக்கிறேன், பாரும்" என்று பந்தயம் போட்டார் அந்த அதிகாரி. 'சரி' என மற்றவர்கள் விட்டுவிட்டார்கள்.

293