பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சும்மா இருக்கும் எல்லை

"என்னைக் கேட்டால் கொஞ்சம் போய்த்தான் பாருங்களேன்" என்று துடித்தாள் அவர் மனைவி. "டேய் வேலப்பா, டேய் சாமிநாதா, போய்க் குளம், குட்டையைப் பாருங்கடா; நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பார்த்து வருகிறேன்" என அந்தப் பையனை அழைத்துக் கொண்டு அதிகாரி வெளியே போய் விட்டார். சில மணி நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அப்பொழுதான் அவருக்குத் தெரிந்தது. மறுநாள் கோயிலுக்கு வந்தவர், "சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டைச் சோறு" என்று உத்தரவு போட்டுவிட்டார்.

மோன நிலைக்கு வழி

சும்மா இருப்பதை மோன நிலை என்று சொல்வார்கள். உடல் அசையாமல் இருப்பது காஷ்ட மெளனம்; வாக்குப் பேசாமல் இருப்பது வாங் மெளனம்; மனம் சிந்திக்காமல் இருப்பது மனோ மெளனம். இந்த மூன்று வகையான மெளனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. மனம் ஓடாமல் நிற்கிற போதுதான் பேச்சு நிற்கும்; உடம்பு அசையாமல் இருக்கும்.

ஒருவன் கட்டை போலப் படுத்துத் தூங்கினான் என்றால் அது மெளனம் ஆகாது. இருவர் பட்டினி கிடக்கிறார்கள். ஒருவன் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதனால் பட்டினி கிடக்கிறான். மற்றவன் உண்பதற்கு மிகுதியான பொருள்கள் இருந்தும், ஏகாதசி என்பதனால் ஒன்றையும் உண்ணாது பட்டினி கிடக்கிறான். சாப்பிடுவதற்குப் பொருள் இருந்தும் எதையும் புசிக்காமல் இருப்பதே விரதம். அதைப்போல உடம்பில் உணர்ச்சி இருக்கும் பொழுது, தூண்டுதல் பல இருந்தாலும் ஜாக்கிரத்தில் எதுவும் செய்யாமல் எதுவும் பேசாமல், எதுவும் சிந்திக்காமல் உடம்பு, வாக்கு, மனம், யோகம், ஆசனம் முதலியவற்றால் உடம்பு அசையாமல் இருக்கப் பழகலாம். இது மோன நிலைக்கு முதற்படி. உடம்பும் வாக்கும் எப்பொழுது செயலற்று.. இருக்கும்? மனம் பலபல பொருள்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதேனும் ஒன்றைப் பற்றியே சிந்தித்தால்தான் இருக்கும். அதற்காகத்தான் தியானத்தை வைத்திருக்கிறார்கள். ஏதேனும் ஓர் உருவத்தை

295