பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பண்ணைச் சேர்த்துப் பேசுகின்ற சொல்லை உடையவள் வள்ளி. அவளுடைய பேச்சானது கொல்லிப் பண்ணைப்போல இனிமையாக இருக்கும்.

கல்வரைக் கொவ்வைச் செவ்வாய் வல்லியை

கல்வரை வல்லி, கொவ்வைச் செவ்வாய் வல்லி எனக் கொண்டு பொருள் கொள்ள வேண்டும். வாயிலிருந்து வரும் பேச்சும், அதைப் பேசும் வாயும் அழகையுடையன என்று பாராட்டுகிறார். அவள் கல் நிரம்பிய மலைகளிலே பிறந்தாள். அவள் சொல் கொல்லிப் பண்ணைப்போல இனிமையாக இருந்தது. கோவைப் பழம்போலச் சிவந்த வாயை உடையவள் அவள். கற்கள் நிரம்பிய மலை நாட்டிலே பிறந்தாலும், வள்ளியெம்பெருமாட்டியின் மொழி உள்ளத்தைக் கரைக்கின்ற கொல்லிப் பண்ணைப் போன்றது. அவள் பேச்சிலே முருகன் மயங்கினான். ஆதலால் அவளுடைய அழகில் வேறு எதையும் சொல்லாமல் அருணகிரியார் அவள் சொல்லையே சொல்கிறார். "தேன் என்று பாகு என்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி" என்று இதற்கு முந்திய பாட்டிலும் குறிப்பித்தார் அல்லவா? அவளுடைய பேச்சுக்காக ஏங்கி நின்றவன் ஆதலால் அதன் சிறப்பை எடுத்துச் சொன்னார்.

அவள் மொழியைக் கேட்க வேண்டுமென்று என்ன என்ன காரியம் செய்தான்! அவளுக்குக் கோபத்தை ஊட்டிப் பேச வைத்தான். மகிழ்ச்சியை உண்டாக்கிப் பேச வைத்தான். அவள் வாயைத் திறந்து ஏதேனும் சொல்ல மாட்டாளா என ஏங்கினான். அவள் வாக்கிலிருந்து எந்தப் பேச்சு வந்தாலும் இன்பமாக இருந்தது; கொல்லிப் பண்ணைப்போல இருந்தது. குயில் அழுகிறது; சிரிக்கிறது; சண்டை போடுகிறது. அது நமக்குத் தெரியாது. அதன் வாயிலிருந்து எது வந்தாலும் அது நமக்குப் பாட்டுத்தான். வீணை வாசித்தால் மிக இனிமையாக இருக்கிறது. தூக்கத்தில் பக்கத்தில் இருக்கிற வீணையின்மேல் கையைத் தூக்கிப் போடும்போது 'டங்' என ஒலி வந்தாலும் அது காதுக்கு இனிமையாக்த்தான் இருக்கும். அப்படி வள்ளியின் வாயிலிருந்து எந்தச் சொல் வந்தாலும் கொல்லிப் பண்ணைப்போல இருந்ததாம்.

முதலில் வள்ளிநாயகி அவனோடு பேசாமல் மெளனம் சாதித்தாள். அவளுக்கு கோபத்தை உண்டுபண்ணி அவளைப் பேச

298