பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயிலின் வேகம்

'முருகா, உன் வாகனமாக ஆடிக்கொண்டிருக்கிற மயிலையும், உன் ஆயுதமாகிய வேலையும், உன்னுடைய கொடியாகிய சேவலையும் பாடுவதையே என்னுடைய பணியாக நீ அருள் செய்ய வேண்டும்', என்று கேட்கிறார்.

எவ்வளவு அறிவுடைய தந்தையாகவேனும் இருக்கட்டும்; தம்மிடம் மாத்திரம் அன்பு வைத்துவிட்டு, தம்மைச் சார்ந்த மகனிடத்தில் வெறுப்பைக் காட்டுகிறவனிடம் முழு அன்பையும் செலுத்த முற்படுவாரா? தம்மிடம் காட்டுகிற அன்பையே தம் குழந்தைகள்பாலும் காட்டுகிறவனிடந்தான் நாட்டம் இருக்கும். அதுபோல இறைவனிடத்தில் அன்பு செலுத்தினால் போதாது. அவனோடு சார்ந்திருக்கும் பொருள்களிடத்திலும் அன்பு உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

முருகனைப் போற்றுவது போலவே அவனிடத்தில் உள்ள வேலையும், மயிலையும், கோழிக் கொடியையும் அடியார்கள் போற்றி வந்தார்கள். தமிழ்நாட்டில் பழங்கால முதலே வேலுக்கும் மயிலுக்கும் மிகச் சிறந்த நிலையைக் கொடுத்திருக்கிறார்கள். மந்திரங்கள் என்று சொல்லப்படுவன வடமொழியில்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. தமிழிலும் மந்திரம் உண்டு. பாம்பு மந்திரம், காமாலைப் போக்கும் மந்திரம் முதலியன தமிழில் உள்ளன. 'வேலும் மயிலும்' என்பதும் பழங்காலம் தொட்டு வழங்கி வருகின்ற ஒரு மந்திரம். இதைச் சதா சொல்லிக் கொண்டே இருப்பவன் இடும்பன். சிவபெருமானுக்குக் காவல் காக்கின்ற நந்தியம்பெருமான் எப்படி ஒரு சிறந்த தொண்டரோ அவ்வாறே முருகப் பெருமானுக்குப் பெரிய தொண்டனாக இருப்பவன் இடும்பன். முருகப் பெருமான் கோயிலில் இடும்பனுக்கும் தனியே ஒரு சந்நிதி இருக்கும். இடும்பன் சிவகிரி, சக்திகிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகக் கட்டித் தோளில் தூக்கிச் சென்றான். சிவகிரிதான் பழனி என்ற திருப் பெயருடன் இன்றும் நின்று நிலவுகிறது. அவன் இரு மலைகளையும் தோளில் கட்டி எடுத்துச் சென்றதனால்தான் முருகனுக்கு காவடி எடுக்கும் சம்பிரதாயம் வந்தது. காவடி எடுக்கின்ற வழியைக் காட்டிக் கொடுத்த ஆசிரியன் இடும்பன். அவன், 'வேலும் மயிலும்’ என்று சதா சொல்லிக்கொண்டே இருக்கிறவனாம்.

305