பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயிலின் வேகம்

சித்தர்களுக்கு தெய்வமாக இருப்பவன் முருகன். அவன் மயில் மேல் ஏறி வந்தால் குண்டலினியென்னும் பாம்பு எழுந்து ஒட, வாசியோகம் நிறைவேறும்.

"வாசியில் ஏறி வருவாண்டி - ஒரு
வாசி நடத்தித் தருவாண்டி"

என்று இராமலிங்க சுவாமிகள் பாடினார். வாசி என்பது வாகனம், வாசியோகம் இரண்டுக்கும் பெயர். மயிலாகிய வாசியில் ஏறி வரும் முருகன் வாசியோகத்தை நடத்தித் தருவான். மயில் வாகனப் பெருமானைத்தியானித்தால் யோகம் கைகூடும் என்பதைஅதிலிருந்து உணர்கிறோம்.

மூன்று வாகனங்கள்

முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் சிறப்பாக உண்டு. ஆட்டுக் கிடா ஒரு வாகனம். நாரதர் யாகம் செய்தபோது உலகத்தை அழிக்கின்ற கிடாய் அதிலிருந்து புறப்பட்டது. அந்தக் கிடாய் உலகத்தை எல்லாம் அழித்துவிடுமே என்று எண்ணி அதை அடக்க அதன் மேல் முருகன் ஏறி அமர்ந்து நடத்தினான்; மேஷ வாகனம் உடையவன் முருகன்.

பன்னிரண்டு மாதங்களுக்குள் சித்திரை மாதத்திற்கு ராசி மேஷம். சூரியன் சித்திரை மாதம் முழுவதும் மேஷ ராசியில் இருப்பான். மலையாளிகள் சித்திரை மாதத்தையே மேஷ மாசம் என்பர். அந்த மேஷராசிக்குச் சொந்தக்காரன் செவ்வாய். செவ்வாய்க் கிரகத்திற்கு முருகனுடைய அம்சம் உண்டு என்று சோதிட நூல் கூறும். செவ்வாய் சிவந்த உருவம் உடையது. முருகப்பெருமானும் சிவப்பு வண்ணத்தான். செவ்வாய்க்கு வாகனம் ஆடு. முருகனுக்கும் அது வாகனம். செவ்வாய்க் கிரகத்தின் கிருபையை அடைய விரும்புபவர்கள் மேஷ ராசியையும், அதற்குத் தலைமை பெற்ற முருகனது அம்சத்தையும் நினைப்பர். அவனுக்கு மேஷம் வாகனம் என்ற நினைப்பில் இருந்து தோன்றியது இது.

முருகனுக்கு மற்றொரு வாகனம் யானை, பிணிமுகம் என்று அதற்குப் பெயர். அடியார்களுக்கு அருள் செய்யும்போது, யானை வாகனத்தில் எழுந்தருளுவான் முருகன். பழம்பெரும் புலவராகிய நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் இதைச் சொல்கிறார். திருத்தணி

309