பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/318

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

குழந்தை என்பன எல்லாம் இளமையுடையவற்றைக் குறிக்கின்றவையானாலும் மனிதக் குழந்தை, காக்கைக் குஞ்சு, யானைக்குட்டி என்று சொல்கிறோம்; இது மரபு. இத்தகைய மரபுகளைத் தொல்காப்பியத்தில் மரபியல் என்ற பகுதி விரிவாகச் சொல்கிறது. பறவைகளில் ஆணைச் சேவல் என்றும் பெண்ணைப் பேடை என்றும் சொல்வது மரபு. ஆண் கோழியைச் சேவல் என்கிறோம். பெண் கோழியைப் பெட்டைக் கோழி என்கிறோம். சேவல் என்று சொன்னால் வீரம் பொருந்தியது, ஆண்மை பொருந்தியது என்று பொருள்படும். மயில் அல்லாத மற்றப் பறவைகளில் ஆணைச் சேவல் என்று அழைக்கலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆண் மயில் அழகாக இருக்கும்; உடல் மென்மையாக இருக்கும். மென்மையான ஒன்றுக்குச் சேவல் என்ற பெயர் கூடாது என்று எண்ணியிருக்கலாம்.

"சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவனும்
மாயிருந் தூவி மயிலலங் கடையே."[1]

இதற்கு உரை எழுதப் புகுந்த பேராசிரியர் மயிலை விலக்குவதற்குக் காரணத்தைக் கூறினார்; 'அவை தோகையுடையவாகிப் பெண்பால் போலும் சாயலவாகலான் ஆண்பால் தன்மை இல என்பது கொள்க' என்றார். முருகப் பெருமான் ஏறுகின்ற மயில் அழகானது; மென்மையானது. ஆனாலும் அதற்கு ஆண்மையும், வீரமும் இல்லை எனச் சொல்லக் கூடாது. பக்தர்களுக்கு மென்மையாக இருக்கும் அம்மயில் பகைவர்களுக்கு பயத்தை அளிக்கும் வீரம் உடையது. ஆகவே அந்த மயிலைச் சேவல் என்று அழைக்கலாம் என்று அவ்வுரைகாரர் எழுதுகிறார். 'செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும்’ என்பது அவர் உரை.

"எழுந்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவல்மேல் ஏறி” என்று கந்த புராணத்தில் முருகன் ஏறும் மயிலுக்குச் சேவல் என்ற பெயரையிட்டு வழங்குகிறார் கச்சியப்ப சிவாசாரியார்.

மயில் வாகனம், போர்புரியும்போது முருகப்பெருமானுக்குப் பயன்பட்டது. அடியார்களுக்கு அருள் செய்யப்போகும்போது பயன்படுகிறது. எந்த இடத்தில் எந்தச் சமயத்தில் நினைத்தாலும்


312
  1. சேவல் என்னும் பெயரைக் கொடுப்பது, சிறகுடைய பறவைகளோடு பொருந்தும், பெரிய கரிய தோகையையுடைய மயில் அல்லாத இடத்து.