பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

வேண்டும். இந்தப் பற்றுக்கள் அறுபட்ட பின்பு இறைவனைப் பற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால், "அலை ஒய்ந்த பின் சமுத்திரத்தில் நீராடலாம்' என்று நினைப்பவன் கதியாகத்தான் முடியும். சமுத்திரத்தில் என்றும் அலை ஒயப்போவதில்லை. உலகப்பற்று அலை அலையாக நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கிறது. அதை ஒழித்து விட்டு பின்பு இறைவனைப் பற்றலாம் என்றால் அது நடக்கிற காரியம் அன்று. பற்று அறுவதற்கே இறைவன் திருவருளைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் பல பொருள்களின் மீது வைத்திருக்கின்ற பாசந்தான் பெரிய பற்று. இந்தப் பற்றே இன்ப துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. இந்தப் பற்றை நழுவச் செய்ய மற்றொரு பற்றைப் போட வேண்டும்.
   "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
   பற்றுக பற்று விடற்கு”
என்பார் திருவள்ளுவர்.

ஒரு பற்றும் இல்லாதவன் இறைவன். உயிர்கள் துன்பம் அடைவதற்கு மூல காரணமாக இருக்கின்ற உலகப் பற்றுக்களை விடுவதற்கு பற்று அற்றானாகிய இறைவனது பற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

ஒருவன் சேற்றில் இருகாலும் புதைந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அவன் அந்தச் சேற்றிலிருந்து விடுபட்டு வெளியே வர வேண்டுமானால் காலைப் பிடுங்கிப் பிடுங்கி மறுபடியும் சேற்றிலேயே ஊன்றி மிதித்து வெளிவர முடியுமா? அது முடியாத காரியம். மறுபடியும் அவன் சேற்றுக்குள் தான் புதைந்து போவான். அந்தச் சேற்றிலேயே கிடக்கும் ஒரு கல்லையோ, மரத்துண்டையோ பற்றிக்கொண்டு வெளிவரலாம் என்று நினைத்து அவற்றை பிடித்துக் கொண்டு முயற்சி செய்தாலும், அந்தக் கல்லும் கட்டையும் சேற்றுக்குள் புதைந்து. போகுமே தவிர அவனால் சேற்றிலிருந்து வெளி வர முடியாது. ஆனால் சேற்றுக்கு அப்பால் ஒரடி, இரண்டடி தள்ளியிருக்கிற ஒரு மரத்தின் கொம்பையோ ஒரு மனிதனின் கையையோ பிடித்துக் கொண்டு வெளிவர முயற்சி செய்தால் முயற்சி பலிக்கும்; சேற்றிலிருந்து வெளி வரலாம்.

23