பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அழியும் காலம் வந்துவிட்டதே என்று அசுரர்கள் மயில் வாகனப் பெருமானைப் பார்த்துக் குடல் கலங்கிப் போனார்கள்.

கசையிடு வாசி விசைகொண்ட
வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு.

அந்த வாகனம் எப்படிச் செல்கிறது. தானே குறிப்பு அறிந்து நடக்கிறது. இயல்பாக வேகமாய்ப் போகும் குதிரையைச் சவுக்கால் அடித்தால் எப்படிப் பறக்குமோ அப்படிப் போகிறது மயில். அந்த வேகத்தைச் சொல்ல வருகிறார். மணிக்கு இத்தனை மைல் வேகமென்று சொல்வது யந்திரக் கணக்கு. இங்கே கவிஞர் அல்லவா அந்த வேகத்தைக் கற்பனைக் கண்கொண்டு பார்த்துச்சொல்கிறார்? மயில் வேகமாகப் போகும்போது என்ன ஆகிறது? மயிலின் தோகையில் உள்ள பீலி அசைகிறது. அசையும்போது விசிறி விசிறினாற்போலக் காற்று அடிக்கின்றது. முழுத்தொகையின் காற்றைப் பற்றிச் சொல்லவில்லை. பீலியின் கொத்து அசைகிறது; அசைந்தவுடன் காற்று அடிக்கிறது.

அசுரர்களைச் சங்காரம் செய்வதற்காக வீர மூர்த்தியாய் முருகப் பெருமான் எழுந்தருளுகிறான். அவுணர்களிடம் மறக்கருணை காட்டி ஆட்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். உலகத்திற்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி இன்பத்தைச் செய்ய வேண்டுமென்று வருகிறான். உயிர்களுக்குத் துன்பம் இழைக்கும் அசுரர்களிடம், நல்வழிக்கு வாருங்கள் என்று சொன்னால் அதை உணர்ந்து அடங்க மாட்டார்கள். அவர்களை அடித்து அடக்கி ஆட்கொள்ள வேண்டுமென்ற எண்ணம்; வீராவேசத்துடன் வருகிறான். அப்படி வரும் போதுஅவனைச் சார்ந்துள்ள பொருள்களிலும் வீரம் எதிரொலிக்கிறது.

ஒர் ஆடவன் மிக்க கோபம் அடைகிறான். அந்தக் கோபத்தை மீசை துடித்துக் காட்டுகிறது; கண் சிவந்து காட்டுகிறது; உடம்பு பதறிக் காட்டுகிறது. அதைப்போல முருகன் போருக்கு வேகத்தோடு வருகிறான். அந்த வீர வேகத்தில் வேல் பளபள என மின்னுகிறது. மயில் மிக வேகமாக ஒடுகிறது. அதன் பீலியின் கொத்து அசைகிறது. காற்று அடிக்கிறது. அப்போது என்ன நடக்கிறது?

314