பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கலாம். நாம் சுவாரசியமாகச் சீட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். அப்போது முதுகில் ஒரு கொசுக் கடிக்கிறது. அது நமக்குத் தெரிகிறது. ஆனால் கையை எடுத்துக் கொசுவை அடிப்பது இல்லை. அது கடிப்பதனால் உண்டான உடல் உணர்ச்சி இருந்தும், சீட்டாட்டத்தில் உள்ள சுவாரசியத்தினால், அதைத் தாங்கிக் கொள்கிறோம். தாங்குகிற ஆற்றல் இருப்பதால் சாட்சியாக இருக்கிறோம். அநுபவம் இருக்கும்; ஆனால் மனவேறுபாடு இராது. அதுதான் சாட்சி மாத்திரமாய் நிற்கும் நிலை. கொசுக் கடித்தாலும் கை அதை அடிக்கிறது இல்லை. கொசுக்கடி தெரியாதவர் போல இருக்கிறோம்; மனத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்கிறோம். சீட்டாட்டத்தில் வேகம் இருப்பதனால் கொசுக் கடியைச் சாட்சியாயிருந்து பார்க்கிறோம்.

திருப்பதிக்கு பிரார்த்தனை என்று சொல்லிச் சில பேர் சாலையில் புரண்டு கொண்டு வருகிறார்கள். அப்படிப் புரளுகிறவன் உடம்பும் நமது உடம்பைப் போன்றதுதான்; அவன் தாய் அவனைப் பத்து மாதம் சுமந்தே பெற்றிருக்கிறாள். அவன் தன் உடம்புக்குக் கவசம் ஒன்றும் போட்டுக் கொள்ளவில்லை. நூற்றுமூன்று டிகிரி வெப்பமுள்ள வெயில் அடிக்கும்போது அவன் கோவிந்தா, கோவிந்தா என்று வீதியில் புரண்டு வருகிறான். அவன் உடம்புக்குச் சூடு தெரியவில்லையா? தெரிகிறது. இருந்தாலும் அந்தச் சூட்டை அவன் தாங்கிக் கொள்கிறான். அந்த அளவில் அவன் மனம் சாட்சி மாத்திரமாக இருக்கிறது. அவனுக்குக் காசு மேலே குறி; பற்று; அதுதான் காரணம். பணத்தின் மேலே அவன் எண்ணம் இருப்பதால் சூட்டை அநுபவிக்கிறான்; மனத்திலே மாறுபாடு இல்லாமல் சாட்சி மாதிரி இருந்து அநுபவிக்கிறான்.

கர்ணன் பரசுராமனிடம் தான் பிராமணன் எனச் சொல்லி வித்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஆசிரியர் படுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தார். தலையணை இல்லை. தம் மாணாக்கன் மடிமீது தலையை வைத்துக் கொண்டு படுத்தார். தம்மை மறந்து சுகமாகத் துங்கினார். அப்போது ஒரு வண்டு கர்ணன் துடையைத் தொளைக்க ஆரம்பித்தது. அசைந்தால் குருநாதர் எழுந்துவிடுவாரே என்று கர்ண்ன் பேசாமல் இருந்தான். ரத்தம் குபுகுபு எனப் பீறிட்டுவந்தது. இருந்தும் அவன் அசையவில்லை. காரணம் மனத்திலுள்ள் வீரம். வண்டு துளைக்கும் வலி

320