பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

தில் உள்ளத்தே நடமாடவிட்டால், நித்தியம் போர்க்களமாக இருக்கிற நம் உள்ளம், அசுர சம்பத்தால் பள்ளம் விழுந்தும், தேவ சம்பத்தால் மேடிட்டும் இருக்கிற உள்ளம், சமனாகிவிடும். இன்ப துன்பங்களைச் சாட்சி மாத்திரமாய் இருந்து அநுபவிக்கலாம். இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை நுகரலாம். இந்தக் குறிப்பும் இப்பாட்டில் உள்ளது.

*

குசைநெகி ழாவெற்றி வேலோன்
அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட
வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது
மேரு; அடியிடஎண்
திசைவரை தூள்பட்ட; அத்தூளின்
வாரி திடர்பட்டதே.

(வெற்றியைத் தரும் வேலையுடைய முருகன் அசுரர்களின் குடல் குழம்பும்படியாக, கடிவாளக் கயிற்றை நெகிழவிட, சவுக்கினால் அடித்த குதிரையின் வேகத்தைக் கொண்ட மயில் வாகனத்தின் பீலியினது கொத்து அசைவதனால் உண்டான காற்றுபட்டு மேருமலை அசைந்தது; அம்மயில் தன் காலை வைக்க, எட்டுத் திக்கிலும் உள்ள மலைகள் தூளாயின; அந்தத் தூளினால் கடல் மேடாகிவிட்டது.

குசை-கடிவாளக் கயிறு. நெகிழா-நெகிழ்த்து; நெகிழ்க்க என்ற பொருளையுடையது; எச்சரி திரிபு. நெகிழ்க்க விசை கொண்ட வாகனம் என்று முடியும். அவுணர் - அசுரர். கசை - குதிரையை அடிக்கும் சவுக்கு. வாசி - குதிரை. விசை - வேகம். பீலியின் கொத்து மயிற் பிஞ்சம். கால் - காற்று. அடி இட - காலை வைக்க. வரை - மலை. தூளின் - புழுதியினால். வாரி - கடல். திடர்பட்டது - மேடாயிற்று.)

322