பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அதைப் போலவே, பற்றில் அழுந்திப் புதைந்து கிடக்கும் நம்மைப் பற்றுக்களிலேயே அழுந்திக் கிடக்கும் வேறு எந்த மனிதராலும் காப்பாற்ற முடியாது. பற்றுக்கு அப்பால் இருக்கிற, பற்று அற்ற, ஒரு பொருளை பற்றிக் கொண்டால், இந்தப் பற்றுக்களிலிருந்து நாம் விடுபட முடியும். அந்தப் பற்றுக்கோடு யார்? அவனே இறைவன். "நான் பற்றுக்கோடாக இருக்கிறேன்" என்பதை அவன் திருநாமமாகிய ஸ்கந்தன் என்பது காட்டுகிறது. பாசமாகிய சேற்றில் அழுந்திக் கிடக்கிற உயிர்கள் அதிலிருந்து விடுபட்டு வெளிவருவதற்குப் பற்றுக்கோடாக இருக்கின்ற தன் நிலையை அறிவிப்பதற்குக் கந்தன் என்ற பெயரோடு காட்சி கொடுக்கிறான் இறைவன். பெயர் விலாசத்தாலேயே அவன் தன்மையை உணர்ந்து கொண்டு நாம் அவனைப் பற்றிக் கொள்ள வேண்டும். ஸ்கந்தன் என்பதற்குரிய வேறு ஒரு பொருள் தூண் என்பது. சிவபெருமானுக்கு ஸ்தாணு என்று ஒரு பெயர். ஸ்தாணு என்பது கம்பத்துக்குப் பெயர்; கம்பம்போல் அசைவின்றி இருப்பவன் என்பது பொருள். சிவபெருமானுக்கும் முருகனுக்கும் வேறுபாடு இல்லை; இருவருக்கும் இந்த இயல்பு பொருத்தமானது.

ஸ்கந்தன் என்பதற்கு இணைப்பை உடையவன் என்பது மற்றொரு பொருள். ஆறு வேறு தனிக் குழந்தைகளாக இருந்த முருகனை உமாதேவி தன் திருக்கரங்களால் ஒருசேர அணைத்து எடுத்தாள். அந்த அணைப்பிலே இணைப்பும் உண்டாயிற்று. ஆறு குழந்தைகளும் ஒன்றாயின; ஆறு முகமும் பன்னிரண்டு கரங்களும் உடையவனாக முருகன் தோன்றினான்.

கடவுளின் திருவுருவம்

"ருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் அமைப்பது தவறு அல்லவா?" என்று கேட்கத் தோன்றும். கடவுளுக்கு உருவம் இல்லையானாலும் அவன் உருவத்தோடு இருக்க மாட்டான் என்பது இல்லை. அவன் தன் உருவத்தை அருள் பெற்ற பெரியோர்களுக்குக் காட்டுகிறான். மனம் கிடைத்த மனிதனுக்கு அந்த மனத்தை அடக்கினால்தான் திறமை உண்டாகும். மனத்துக்கு எட்டாதவன் இறைவன். மனமோ உருவத்தைத்தான் பற்றும். இறைவனது உருவத்தைத் தியானம் பண்ணும்படியாகப்

24