பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/333

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சேவற் பதாகை

'வீணையே வராது எனச் சொல்லி கழித்து விடப்பட்ட இவனே இவ்வளவு நன்றாக வாசிப்பான் என்றால், இவன் குருநாதர் எப்படி வாசிப்பாரோ?' என்று வியந்த ஏமநாதன், "உன் குருநாதர் யார் அப்பா?” என்றான்.

"அவரை உமக்குத் தெரியாதா? அவர்தான் பாணபத்திரர்; பாண்டியன் அவைக்களத்துப் பாணர்" எனச் சொல்லக் கேட்டான் ஏமநாதன். அவ்வளவுதான். அன்றைக்கே இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே ஒடிப் போய்விட்டான். பாணபத்திரனது பெருமையை இறைவன் நேர்முகமாகச் சொல்லவில்லை. "அவனால் கழித்து விடப்பட்டவன் நான்" என்று சொன்னான். 'நானே இவ்வளவு நன்றாக வாசிக்கிறேன் என்று நீர் சொன்னீரானால், என் குருநாதர் எப்படி வாசிப்பார் என்பதை நீரே ஊகித்துக் கொள்ளலாம்' எனச் சொல்வதுபோலச் சொன்னார்.

2

சேவலின் பெருமை

தைப்போலவே இந்தப்பாட்டில் தன் தந்தையின் பெருமையை அருணகிரிநாதக் குழந்தை நேரே சொல்லவில்லை. அவனுடைய கொடியின் பெருமையைச் சொல்வதன் வாயிலாக அவன் பெருமையைப் புலப்படுத்துகிறது.

பெரிய வெற்றியை உடைய மன்னர்களின் அரண்மனையிலும், கோட்டைகளிலும் கொடி பறக்கும். நெடுந்துரத்தில் வருகிறபோதே காற்றில் ஆடுகிற அந்த வெற்றிக் கொடியைப் பார்த்துவிட்டு எத்தனையோ பேர்கள் அஞ்சி ஒடுவார்கள்.

கடவுளரின் திருக்கோயிலின் வாசலிலும் கொடி பறக்கிறது. ஆடுகின்ற அக்கொடி அத்திருமாளிகையின் பெருமையையும், அதில் இருக்கிற தெய்வத்தின் வெற்றிச் சிறப்பையும் விளக்குகிறது. முருகனுடைய திருக்கோயிலில் பறப்பது சேவற்கொடி, அவன் திருக்கரத்தில் இருப்பதும் அதுவே. அதை நினைக்கும் போது அருணகிரியாருக்குக் கற்பனை விரிகிறது. மயிலின் பிரதாபத்தைப் போன பாட்டிலே நினைத்தவர், தொடர்ந்து சேவலின் பெருமையை இப்போது நினைக்கிறார்.

327