பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேவற் பதாகை

என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது பொருள் என்பதும், சக்தி என்பதும் ஒன்றுதான் எனக் கண்டுபிடித்து விட்டார்கள். இயங்காமல் இருந்தால் பொருள்; இயங்கினால் சக்தி. பொருள் சிவம்; இயக்கம் சக்தி.

சிவத்திலிருந்து சக்தி தோன்றியது. சக்திக்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாகத் தத்துவங்கள் தோன்றின. அப்படித் தோன்றியவைகளில் முதல் தத்துவம் நாதம். இந்த நாத தத்துவத்தைக் குறிப்பிக்கிறது கோழி.

பிரளயகாலத்தில் உயிரினங்கள் எல்லாம் அடங்கிக் கிடக்கின்றன. ஒரு நாள் ராத்திரி என்பது பிரளயத்திற்குச் சமானம். எப்படி எல்லா உயிர்களும் இரவில் அடங்கி இருக்கின்றனவோ, அப்படியே எல்லாத் தத்துவங்களும் ஒன்றில் ஒன்று அடங்கிப் பிரளயகாலத்தில் இருக்கும். தினந்தோறும் தூங்கும் தூக்கத்தை நித்தசங்காரம் என்றும், பிரளயத்தை மகாசங்காரம் என்றும் திருமூலம் குறிப்பிடுவார். மறுபடியும் உயிர்கள் விழிப்படைவது ஜனனம். இரவு விடியப் போகிறது என்பதற்கு அடையாளமாக முதலில் கூவுவது கோழி. பிரளயத்திற்குப் பிறகு உலகம் விரியப் போகிறது என்பதற்கு முதல் அடையாளமாகத் தோன்றுவது நாத தத்துவம். இந்தத் தத்துவத்திற்கு அறிகுறியாக இருப்பது கோழி.

சேவலான சூரபன்மன்

டுத்த கோழி சூரபன்மனது சங்கார காலத்தில் எழுந்தது. சூரபன்மனது உடலில் முருகப் பெருமனின் வேல் பாய்வதற்கு முன் அவன் மாமரமாக நின்றான். வேல் அவன் உடலில் பாய்ந்த போது அவனது அகங்காரம், மமகாரம் இரண்டும் பிளக்கப்பட்டு இரு பகுதியாயின. ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவலாகவும் மாறின. அந்தச் சேவலைத் தன் கொடியாகக் கொண்டான் ஆண்டவன். அது மேலிருந்து கூவுகிறது.

'கொக்கறு கோ'

சேவலைப் பற்றி மிகப் பழங்காலத்து நூலாகிய குறுந்தொகையில் உள்ள கடவுள் வாழ்த்துச் சொல்கிறது.

க.சொ.1-22

329