பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/352

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இதைக் கேட்ட அப்பைய தீட்சிதர், "அஸ்மிந் கிராமே ஆச்சா பிரஸித்தா" என்றாராம். "என் மனைவியின் ஊரில் ஆச்சாதான் பிரசித்தமானவள்" என்பது பொருள்.

அதுபோல இங்கே அம்மாவின் ராஜ்யம் நடக்கிறது. ஆதலால் அம்மாவுக்குத்தான் சிறப்பு. 'ஒருத்தியைப் பங்கில் உடையான் குமாரன்' என்று சொல்லாமல் ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன் என்று பாடினார் அருணகிரியார்.

2

கிங்கிணி ஓசை

முருகன் திருவவதாரம் செய்தபோது பாலை விரும்பி அழுதானென்றும், அந்த அழுகையைக் கேட்ட அசுரரும் பிறரும் தாம் வாழ்வைக் குலைப்பவன் பிறந்துவிட்டான் என்று அழுதார்கள் என்றும் முன்பு ஒரு பாட்டில் அவர் சொன்னார். இப்போது அந்தக் குழந்தை ஆடி அசைகையில் அவன் இடுப்பில் கட்டிய கிங்கிணியோசையைக் கேட்டு நடுங்கினார்கள் என்று சொல்ல வருகிறார். குழந்தை இடையில் அணியும் ஆபரணங்களில் உடை மணி என்பது ஒன்று. முருகன் திருவரையிலும் அது இருக்கிறது. அதையன்றிச் சலங்கையும் அணிந்திருக்கிறான். குழந்தை தொட்டிலிற் புரளும்போதும் உட்காரும்போதும் ஆடும்போதும் நடக்க முயலும்போதும் அந்தச் சலங்கை ஜல் ஜல் என்று ஒலி செய்கிறது. அது எங்கும் கேட்கிறது.

ஒருவரைப் பங்கில் உடையாள் குமாரன்
உடைமணிசேர்
திருவரைக் கிங்கிணிஓசை பட

முன்பு குழந்தையின் அழுகையைக் கேட்டு நெஞ்சம் துணுக்குற்ற அசுரர்கள், "அந்தக் குழந்தை வளருகிறதா?" என்று விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். அப்படியே மறைந்த போனால் நல்லது என்பது அவர்களுடைய ஆசை. ஆனால் அது நடக்கிற காரியமா?

அசுரர் நிலை

வனுடன் சம்பந்தப்பட்டவர்கள் வருகிறார்களா, அவன் ஏதாவது குரல் எழுப்புகிறானா என்று கண்ணையும் காதையும்

346