பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அரசாட்சியில் முக்கியமான பதவிகளில் எல்லாம் அவன் தன் துணைவர்களையே வைத்திருக்கிறான். திக்குகளில் அவனுடைய படைவீரர்கள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் சென்று மோதுகிறது கிங்கிணி ஓசை. திக்குச் செவிடுபட்டுப் போகும்படி அந்த ஒலி பரவுகிறது.

திக்குச் செவிடுபட்டு

மலைகள் அதிர்தல்

மேருமலை நடுவில் நிற்க எட்டுப் பெருமலைகள் சுற்றிலும் நிற்கின்றன. இந்த ஒலி அவற்றையும் அதிரச் செய்கிறது. ஒலியின் சிறப்பையும் வேகத்தின் கடுமையையும் அளவுகாட்ட, மேருவையும் எட்டு மலைகளையும் அவை நடுங்க வைத்தன என்று சொல்வது அருணகிரிநாதருக்கு வழக்கமாகிவிட்டது. மயில் நடக்கும்போது அதன் பீலிக் காற்றுப் பட்டதும்,

"அசைந்தது மேரு; அடியிட எண்
திசைவரை தூள்பட்ட"

என்று பாடினார். சேவல் சிறகை அடித்துக் கொண்ட போது என்ன நிகழ்ந்தது?

"இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும்
இடிபட்டவே"

என்று அவர் பாடுகிறார். அந்தக் காற்றின் கடுமையை இந்த நிகழ்ச்சியினால் உணரும்படி செய்கிறார். 'அணுகுண்டு வெடித்தது; அதன் ஆற்றல் இத்தகையது' என்று சொல்ல வருகிறவர்கள் அதனால் விளைந்த விளைவையே சொல்கிறார்கள். ஒரு கணத்தில் மூன்று லக்ஷம் பேர்கள் இறந்தார்கள் என்கின்றார்கள். அது போலவே அருணகிரிநாதரும் விளைவைக் கண்டு நிகழ்ச்சியையும் அதற்குக் காரணமான பொருளையும் சிறப்பிக்கிறார்.

கிங்கிணி ஓசை பகைவரை நடுங்கச் செய்தது; திக்குச் செவிடு படும்படி செய்தது; எட்டு மலைகளையும், கனகக் குன்றாகிய மேரு மலையையும் அதிரச் செய்தது.

எட்டுவெற் பும்கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன.

348