பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இல்லாத அந்தப் பச்சிலைகள் பின்னும் எடுத்துக் காட்டுகின்றன. அதுபோல இறைவனுடைய குணநலங்களைச் சொல்லுகிற பாட்டுக்கு இடையே குணநலங்கள் அற்ற மக்கள் புரிகின்ற குற்றங்களையும் எடுத்துச் சொல்கிறார் அருணகிரியார். ஆண்டவனுக்கு உகந்த அழகு மலர் மாலை அல்லவா? துன்புறுகிறவர்களைக் காப்பாற்றுகிறவன் என்பதை அறிவித்து, ஆண்டவனது கருணையை அதிகமாக எடுத்துக்காட்ட உதவுவன அவை.

ஆண்டவனது பெருமையையே சொல்லிக் கொண்டிருந்தால் ஆண்டவன்பால் மனம் குவியாது. "நான் பாவி; நான் இன்ன இன்ன குற்றங்களைப் புரிகிறேன்” என்று சொன்னால் மனம் உருகுகிறது; இறைவன் கருணையை நினைக்கிறது. அதனால் தான் இறைவனது குணங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே போகும்போது இடையிடையே தம்முடைய குற்றங்களையும் எடுத்துச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

கந்தர் அலங்காரம் என்ற தொடருக்குப் பொருள் கந்தருக்கு உரிய அலங்காரம் ஆகிய நூல் என்பது; தேவாரம் என்பதற்கும் அப்படி ஒரு பொருள் இருக்கிறது. தே என்றால் தெய்வம்; ஆரம் என்றால் மாலை; தேவாரம் என்பதற்கு, தெய்வத்துக்குப் போடுகிற மாலை என்று பொருள் செய்யலாம்; சொற்களால் தொடுக்கப்பட்ட மாலை என்பது பொருள்.

அருணகிரிநாதப் பெருமான் 100 பாடல்களினால் கந்தனுக்கு அலங்காரம் செய்கிறார்; 100 அழகான பாடல்களை உடைய மாலையை முருகப்பெருமானுக்குச் சமர்ப்பிக்கிறார்.

32