பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பெருமான் இருக்கிறான். விநாயகருக்கு அவர் தனியாகத் துதி சொல்லவில்லை. விநாயகரை நினைக்கிறார். 'ஒரு பாட்டிலே விநாயகரையும் சொல்ல வேண்டும்; முருகனையும் சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறார். அதை எப்படிச் சொல்வது? நம் தாய்மார்கள் தம்முடைய மாப்பிள்ளையைச் சொல்லும்போது தம் பெண்ணைச் சொல்லி அவரைக் குறிப்பிடுவார்கள்; "நம் லட்சுமி புருஷன்" என்று குறிப்பிப்பார்கள். இதைப் போலவே அருணகிரிநாதர் பாடுகிறார். "நான் திருவண்ணாமலைக்குப் போனேன். கோபுர வாசலுக்குப் போனேன். உள் வாசலில் உள்ள களிற்றுக்கு இளைய களிற்றைத் தரிசித்தேன்" என்று பாடுகிறார்.


   அடலரு ணைத்திருக் கோபுரத் தேஅந்த வாயிலுக்கு
   வடவரு கிற்சென்று கண்டு கொண்டேன்...

முருகனைக் கண்டுகொண்டேன் என்று சொல்ல வந்தவர். களிறாகிய விநாயகருக்குத் தம்பியாகிய களிற்றைக் கண்டேன் என்கிறார். அண்ணாவாகிய களிறு எத்தகையது?


வருவார் தலையில்


   தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
   கடதட கும்பக் களிறு.
"அதோ விநாயகர் வீற்றிருக்கிறார். அவரைப் பார். அந்தக் களிற்றுக்கு இளைய களிறாகிய முருகனை நான் கண்டு கொண்டேன்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த பாடலில் ஐந்து பகுதிகள் இருக்கின்றன. திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலுள்ள கோபுரம், அதிலேயுள்ள உள்வாயில், அந்த வாயிலுக்குத் தெற்கே இருக்கிற விநாயகர், வடக்குப் பக்கத்தில் இருக்கிற குமாரசுவாமி ஆகிய ஐந்து பொருள்களையும் இந்தப் பாடலில் காணலாம்.


அடல் அருணை

புராணங்களிலும், காவியங்களிலும் நகரச் சிறப்பைச் சொல்லும் படலம் ஒன்று முன்னே இருக்கும். இங்கே நகரப் படலத்தைச் சுருக்கமாகக் கூறிக்கொண்டு பாட்டை ஆரம்பிக்கிறார் அருணகிரிநாதர்.

34