பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடதட கும்பக் களிறு

ஊரில் கோயில் இருந்தால் அங்கே திருமகள் விலாசம் இருக்கும். இல்லையானால் திரு இருக்கமாட்டாள். "திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்" என்பது அப்பர் வாக்கு. கோபுரம் இல்லாத ஊர், அதாவது திருக்கோயில் இல்லாத ஊர், மூதேவி உறைகின்ற ஊர் என்பது அவர் குறிப்பு. இறைவன் திருக்கோயில் இல்லாத ஊரை ஊர் என்று சொல்லக்கூடாது. "அவையெல்லாம் ஊர் அல்ல; அடவி காடே" என்பர் அப்பர்.

இதனை உடம்பு என்று சொல்லுகிறோம். கை, கால், மூக்கு, கண், காது என்பவற்றைத் தனித்தனியாக உடம்பு என்று சொல்லுகிறதில்லை. உயிர் இருந்தால்தான் அதற்கு விலாசம். உயிர் இருந்தால்தான் ராமசாமி ஐயர், ராமசாமி நாயுடு, ராமசாமி முதலியார் என்பன போன்ற விலாசங்கள் அமையும். உயிர் இல்லாவிட்டால், கை, கால், கண், மூக்கு, காது இருந்தாலும் 'பிணம்' என்றுதான் பெயர். அவ்வாறே ஆண்டவன் திருக்கோயில் இல்லாத ஊரில் வீடுகள், பார்க்குகள், தொழிற்சாலைகள் முதலியன இருந்தாலும் அது காட்டுக்கு ஒப்பானதே.

ஊர் என்று சொல்வதற்கு ஏற்றபடி இருக்க வேண்டுமானால் அங்கே லட்சுமீகரம் பொருந்திய திருக்கோயில் இருக்க வேண்டும். கோயிலுக்கு அடையாளம் கோபுரம். வீரம் பொருந்திய திருவண்ணாமலையில் திருமகளின் விலாசம் நிறைய உண்டு. திருக்கோபுரம் இருக்கிறது. திருவின் விலாசம் உள்ள கோபுரம், திருக்கோபுரம்.

அந்த வாயில்


   அடலரு ணைத்திருக் கோபுரத்தேஅந்த வாயிலுக்கு.

அந்த வாயிலுக்கு என்றால் உள் வாயிலுக்கு என்பது பொருள். உள்ளேயிருப்பது அந்தப்புரம்; உள்ளே உள்ள கரணம் அந்தக்கரணம்.

"ஞான வீரர்கள் நடமாடிய ஊர் திருவண்ணாமலை; திருமகள் தாண்டவமாடும் ஊர். அதற்கு அடையாளமாக விளங்கும் இந்தத் திருக்கோபுரத்தைப் பாருங்கள். உள்வாசலுக்கு வாருங்கள்" என்று நம்மை அழைத்துக் கொண்டு போய் நிறுத்துகிறார்.

39