பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

உயிரும் உடம்பும் சேர்ந்திருக்கின்றன. சித்தும் ஜடமும் சேர்ந்து உலகம் நடைபெறுகிறது. சித்தாகிய உயிரோடு மனம் என்ற ஒன்று இணைந்திருக்கிறது. ஜடம் ஐந்து பொருள்களாலானது. மூன்று விதமான வர்ணங்களைக் கொண்டு பல வர்ணமுள்ள படங்களையும் போட முடியும் என்று ஓவியக்காரர்கள் சொல்வார்கள். மஞ்சள், சிவப்பு, நீலம் ஆகிய இந்த மூன்று வண்ணங்களின் சேர்க்கையினால் பல வண்ணங்கள் உண்டாகின்றன. அதைப் போலவே சத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்களினால் மனம் அமைகிறது. எல்லாக் குணங்களையும் இந்த மூன்றில் அடக்கி விடலாம். ஜடப் பொருள்களும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் ஐந்து தத்துவங்களினால் ஆனவை. பிரபஞ்சம் ஐம்பூதச் சேர்க்கையாலானது. இந்த உண்மையை நம் நாட்டில் சாதாரணப் பழமொழியில் வைத்துக் காட்டுவார்கள்.

"அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. அஞ்சும் மூன்றும் எட்டு என்று சேர்த்து, எட்டு வயசானால் எந்தப் பெண்ணும் சமையல் செய்வாள் என்று இதற்கு பொருள் கொள்ளலாம். அது அவ்வளவு சிறப்பானது அன்று. அடுப்புக்கு வேண்டியது மூன்று கல். சமையலுக்கு வேண்டிய சாமான்களைப் போட்டு வைத்துக் கொள்வது அஞ்சறைப் பெட்டி. அடுப்புக்கல் மூன்றும் பண்டம் நிரம்பிய அஞ்சறைப் பெட்டியும் இருந்தால் அறியாத பெண்ணும் கறி சமைப்பாள் என்று பொருள் கொள்ளலாம். உலகியலுக்கு ஏற்ற பொருள் அது. அதற்குள்ளே மற்றொரு வேதாந்தக் கருத்தையும் வைத்திருக்கிறார்கள். நம் வாழ்க்கைப் போக்கிலேயே ஆத்மார்த்த உண்மைகளையும் நம் பெரியோர்கள் புலப்படுத்தினார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

உலகத்தைச் சித்து, ஜடம் ஆகிய இருவகைப் பொருள்களையும் கொண்டு பராசக்தி படைக்கிறாள். ஜடத்தை ஐந்து தத்துவங்களைக் கொண்டும், சித்தோடு இணைந்த மனத்தை மூன்று குணங்களைக் கொண்டும் படைக்கிறாள். வேதமும் முனிவரும் அறியாத பெண்ணாகிய பராசக்தி (அறியாப் பெண்) முக்குணத்தையும், ஐம்பூதத்தையும் கொண்டு உலகத்தைப் படைத்து நடத்துகிறாள். இந்த கருத்தை உள்ளடக்கியது அந்தப் பழமொழி.

50