பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


 என்னுடைய அலங்காரப் புத்தகங்களைப் போடுகிறாயா?" என்று கேட்டார். ஒரு தெய்வப் புலவர் எழுதியதை மற்றொரு தெய்வப் புலவர் விளக்கமாகக் கூறிய நூலை 'வெளியிடுகிறாயா?' என்று கேட்கப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன்; இவ்வளவு பெரிய பாக்கியம் நமக்கு உள்ளதா? என்று எண்ணி வியந்தேன். அன்று அவர் போட்ட பிள்ளையார் சுழி இன்றும் தொடர்ந்துகொண்டே போகிறது. எல்லாம் அவன் அருள்! 2005-ம் வருடம் கி.வா.ஜ. அவர்களின் நூற்றாண்டு வருகிறது. இந்தச் சமயத்தில் அவருடைய அனைத்து நூல்களையும், ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட, இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நல்லதையே எண்ணினால், நல்லவைகளே நடைபெறும் என்பது ஞான வாக்கு, அதேபோல, இப்படிப்பட்ட நல்ல நூல்களை வெளியிட எண்ணி, அதன்படி நாங்கள் நடந்து வருவதால், இதைப் படிக்கும் வாசகர்களுக்கும் நல்லவைகளே சித்தி பெறும்.

இந்நூல் இப்போது நமது நிறுவனத்தின் மூலம் ஒரே தொகுப்பாக (6 பாகங்களாக) முதல் பதிப்பாக வெளிவந்தாலும், 1956 வாக்கிலிருந்து சிறுசிறு நூல்களாக, அவ்வப்போது வெளியிடப்பட்டதுதான்.

வாசகர்களே! கி.வா.ஜ. அவர்களின் ஞானப் பெருக்கையும், அவர் கையாண்ட தமிழ் அழகையும் நீங்களே படித்து ரஸியுங்கள்; சுவையுங்கள்; போற்றிப் பாதுகாத்து பயன்பெறுங்கள்.

-

'அல்லயன்ஸ்'ஸ்ரீநிவாஸன்