பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கிருபாகரன்

பஞ்சம் என்பது ஐந்து. ஐம்பூதங்களால் அமைந்ததாதலின் பிரபஞ்சம் என்ற பெயர் வந்தது. உலகம் முழுவதிலும் உள்ள ஜடப் பொருள் அத்தனையும் ஐந்து பூதங்களின் கலப்பு. உப்புமா, தோசை, இட்டிலி என்று பலவிதமான சுவையுள்ள பண்டங்களைப் பண்ணினாலும் அவை எல்லாம் சில பொருளின் மாறுபட்ட உருவங்கள். இப்படியே பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் உலகிலுள்ள பொருள்கள் எல்லாம் ஆகின்றன; உடல் ஆகிறது. உடலில் இருக்கிற பகுதிகளை எல்லாம் பிரித்தால் அவை இந்த ஐந்து தத்துவங்களில் அடங்கி விடும். இதற்குப் "பஞ்சீகரணம்" என்று பெயர்.

உலகம் ஐந்தாலானது என்பதைச் சுந்தரகாண்டத்தில் கம்பர் மிகவும் அழகாகச் சொல்லுகிறார். அக்காண்டத்தின் கடவுள் வணக்கப்பாட்டில் அதைச் சொல்கிறார்.

ராமன் ஒரு 'சர்ஜன்'. அவன் தன் கையில் உள்ள ஆயுதத்தால் கீறக்கூட வேண்டாம்; அதைத் தன் கையில் வைத்துக் கொண்டு நின்றாலே போதும். வீக்கம் வடிந்து விடும்; மாயையாகிற வீக்கம் வடிந்து விடுமாம்.

ஐந்து பூதங்கள் தனித்தனியே இராமல், கலந்து உலகமாக நிற்கின்றன. அந்தக் கலப்பினால் உண்டாகும் வேறுபாட்டினால் உண்மையை அறியாமல் நாம் மயங்குகிறோம். அந்த மயக்கமே மாயை. அது மேலும் மேலும் அதிகமாகிறது; வீங்குகிறது. அந்த வீக்கம் ராமனைக் கண்டால் கலங்குமாம்.

கல்யாணம் முதல் நாள் ஆனவுடன், வாடிப்போன மாலைகளை வாயிலில் போட்டு விட்டார்கள். இரவில் வீதி வழியே போனவன் அந்த வாடிப்போன மாலையைக் கண்டு பாம்பு என எண்ணி அலறுகிறான். பின்பு பார்த்தால் அது வாடிப்போன மாலை என்று தெரிகிறது. மாலையைப் பாம்பு என்று முதலில் மயங்கினான். பிறகு அந்த மயக்கம் தெளிந்தது. அப்படியே உலகிலுள்ள பலபல பொருள்களை எல்லாம் உண்மை என நினைத்து நாம் வாழ்கிறோம். உண்மையைத் தெரிந்து கொண்டால் அவையாவும் பஞ்ச பூதங்களின் வேறுபாடு, தோற்றம் என்று அறியலாம். அறியாமல் மாயையுட் சிக்கியிருக்கும் மக்களுக்கு, அந்த வேறுபாடுற்ற வீக்கத்தை ராமன் போக்குவான்.

51