பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருபாகரன்

பக்குவமற்ற நிலையிலே இருந்த என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டானே, என்ன அதிசயம்!" என்று ஆனந்த அதிசயத்தோடு பாடுகிறார். "வழிவிட்டவா!" என நீட்டும்போது அவர் பாடுகின்ற ஆச்சரியம் தெரிகிறது. "வழி விட்டவாறு என்னே" என்று பொருள் கொள்ள வேண்டும்.

அதிகமாக ஆனந்தப்படுபவனுக்கோ, துக்கப்படுபவனுக்கோ வார்த்தை எதுவும் முறையாகச் சொல்ல வருவதில்லை. மிக்க கூட்டமான இடத்திற்குப் போய் நமக்கு வேண்டிய ஒரு சாமானை வாங்கி வரும்படி ஒருவனிடம் சொல்கிறோம். அதை அவன் வாங்கி வந்துவிட்டானானால், அந்த மகிழ்ச்சியிலே அவன் நம்மிடம் வந்ததும் வராததுமாகத் தான் பட்ட சிரமத்தைச் சொல்ல ஆரம்பிப்பான். "வாங்கி வந்தாயா, இல்லையா?” என்று கேட்டாலுங்கூட, "'நான் போனேனா ஒரே கூட்டம். அடேயப்பா என்னை நெரித்து விட்டார்கள்" என்று சொல்ல ஆரம்பிப்பான்.

அதைப்போல, அருணகிரிநாதர் முருகன் கருணையைச் சொல்ல ஆரம்பித்தவர் முருகனை முதலில் சொல்லவில்லை. அவன் பேற்றைப் பெற்ற எல்லையில்லா ஆனந்தத்தில் தம் பழைய நிலையைப் பற்றிச் சொல்லுகிறார். 'பேற்றைத் தவம் சற்று மில்லாத பாவி’ என்று தம்மைச் சொல்லுகிறார். பக்குவம் இல்லாத என்னை அவன் ஆண்டு கொண்டான் என்று சொல்லும்போது அவரது நன்றி பொங்குகிறது. "வழிவிட்டவா" என்று ஆச்சரியத்தோடு சொன்னாரேயன்றி வழி விட்டவன் யார் என்பதை முன்னே சொல்லவில்லை. சற்று நின்றார்; பின்பு சொல்லத் தொடங்குகிறார்.

அவன் யார் தெரியுமா? கிருபாகரன் அவன் என்கிறார். அவன் கருணைக் கடலாம். அவனை இன்னார் பிள்ளையென்று அறிமுகப்படுத்துகிறார்.

2

பெரிய குடும்பம்

முதலில் உள்ள காப்பில், "விநாயகருக்குத் தம்பியைக் கண்டேன்" என்று சொல்ல வந்து, விநாயகரை நமக்கு அறிமுகப்

53