பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருபாகரன்

பிறகு எல்லாம் ஒரே விலாசந்தான். கங்கையில் யமுனை புகுந்தாலும் கங்கைதான்; சாக்கடை புகுந்தாலும் கங்கைதான். இரண்டிற்கும் அதில் வேறுபாடு இல்லை. அதைப்போல எம்பெருமானுடைய சம்பந்தம் பெற்ற பொருள்கள் யாவும் ஒன்றுதான்; ஒன்றுக்கொன்று வேறுபாடு கிடையாது.

சிவபெருமானைப் பற்றிச் சொல்லும்போது முதலில் அவனது திருக்கோலத்தைக் காலில் இருந்து வர்ணிப்பதா? தலையில் இருந்து வர்ணிப்பதா? எல்லாவற்றையும் வர்ணிக்கப் பாட்டுப் போதாது. ஒன்றை வர்ணித்தாலே முழுவதும் வர்ணித்ததாக ஆக வழி உண்டா? நமக்குத் தலையில்லாவிட்டால் உடல் எல்லா ஒரே மாதிரிதான் இருக்கும். தலையாகிற சின்னத்தைக் கொண்டுதானே அடையாளம் கண்டு கொள்ளுகிறோம்? உடம்புக்குள் தலை உத்தமமானது. அதற்கு 'உத்தமாங்கம்' எனப் பெயர். ஆகவே, சிவபிரான் சிவந்த சடைக் காட்டின்மேல் செஞ்சடாடவிமேல், என்ன இருக்கின்றன என்று சொல்கிறார்.

அவனது கருணையை காட்டுகிற பொருள்கள் அங்கே இருக்கின்றன. அப்படி உள்ளனவற்றுள் ஐந்து பொருள்களைச் சொல்கிறார். அவன் கங்கை ஆற்றை அணிந்த பெருமான்; பாம்பை அணிந்த பெருமான்; இதழியை அணிந்த பெருமான், தும்பை மலரை அணிந்த பெருமான்; அம்புலியின் கீற்றை அணிந்த பெருமான். அவனது ஜடா முடியில் கங்கை ஆறு, அரவாபரணம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைமதி ஆகிய ஐந்து பொருள்கள் இருக்கின்றன. ஒர் ஆறு, இரண்டு மலர்கள், ஒரு மதி ஆகிய கூட்டதிற்கிடையேயும் பாம்பும் இருக்கிறது. அதற்கு உணவாகிய மதி பக்கத்தில் இருந்தாலும் அது உண்ணுவது இல்லை.

கங்காதரன்

ம்பெருமானுடைய செஞ்சடை ஆகிய அடவியில் இருக்கிற பொருள்களைச் சொல்ல வந்தவர் முதலில் ஆற்றைச் சொன்னார். "பிரபஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா" என்று சேற்றைச் சொன்னவர் உடனே ஆற்றைச் சொல்வது பொருத்தந்தானே? "நான் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட கிருபாகரனுடைய தகப்பனார் கங்கையைத் தலையில் சுமந்து கொண்டிருக்கிறார்" என்று முதலில் அடையாளம் காட்டுகிறார்.

க.சொ.1-5

57