பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கங்கை எல்லோருடைய அசுத்தத்தையும் போக்கும் புனிதம் உடையது. ஆனால் அதற்கே ஒரு காலத்தில் அசுத்தம் வந்து விட்டது; குணபேதம் வந்தது. யாராவது கஷ்டப்பட்டால் அதனைக் கண்டு உடனே இரங்குபவர்கள் பெண்கள். கங்கை பாய்ந்தால் தன்னுடைய முன்னோர்களின் சாபம் தீருமென்று தெரிந்து கொண்டு பகீதரன் கங்கையை நோக்கித் தவம் செய்தான். அவன் செய்த தவத்தை நினைந்தால் எல்லோருடைய மனமும் இளகும். அத்தகைய பெருந்தவத்தை அவன் செய்தாலும் கங்கையின் மனம் இரங்கவில்லை. அவள் ஆணவத்தால் சீறி நின்றாள்.

இரக்கமற்றவனை நெஞ்சிலே ஈரம் அற்றவன் என்கிறோம். ஈரம் இரக்கத்தைக் காட்டுகிறது. நீருருவம் உடைய கங்கைக்கு இயற்கையிலேயே ஈரம் இருக்க வேண்டும். ஆனால் அவளிடம் ஈரமே இல்லை; பகீரதன் செய்த கடுந்தவத்தைக் கண்டும் இரக்கம் உண்டாகவில்லை. அவள் தண்மை இல்லாமல் செருக்கால் கொதிப்படைந்திருந்தாள். "நான் வருவேன். ஆனால் என்னைத் தாங்குவார் யார்?" என்று ஆணவத்தால் இறுமாந்திருந்தாள். "நான் தாங்குகிறேன்" என்று சிவபெருமான் சொல்லி அவள் ஆணவக் கொதிப்பை மாற்றத் தன் சடையில் ஏற்றான்.
   "விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
   மண்ணுக்கடங்காமல்..."
அவள் குபுகுபு என வந்தாலும் தன் சடாமகுடத்திலே அடக்கினான் சிவபெருமான். யாருக்கும் பயன்படாமல் இருந்த கங்கையை, தன் அகங்காரத்தால் அழுக்காகிக் கொதிப்படைந்திருந்த கங்கையை, தன் சடையில் தாங்கிப் புனிதமாக்கி, தண்மையைக் கொடுத்தான். அப்பால் அது யாவருக்கும் பயன்படும் திரிபதகை ஆயிற்று. எல்லாவற்றையும் புனிதம் ஆக்கும் கங்கை அழுக்கடைந்தபோது அதனைத் தன் சடையில் ஏற்றுப் புனிதமாக்கிய பெருங் கருணையாளன் சிவபெருமான் என்பதை நினைக்கச் செய்கிறது அந்த ஆறு.

திருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனைப் புனிதமானவன் என்று சொல்ல வந்தார். அவன் எல்லோருடைய அழுக்கையும் போக்குகின்ற தன்மை உடையவன். டாக்டர் நோயாளியினுடைய

58