பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பிரதிநிதி கங்கை. இயற்கையிலேயே கெட்டவர்களாகப் பிறந்து, ஆயுள் முழுவதும் கெட்டவர்களாகவே இருப்பவர்களுங்கூட இறைவனை அடைந்த மாத்திரத்திலே தங்கள் கெட்ட குணத்தை விட்டவர்களாகிறார்கள். இப்படிப்பட்டவர்களுடைய கூட்டத்திற்கு பிரதிநிதி பாம்பு. இயற்கையிலேயே நல்லவர்களாக பிறந்து, ஆயுள் முழுவதும் நல்லவர்களாகவே இருக்கின்றவர்களும் இறைவனை அடைகிறார்கள். இத்தகையவர்களுடைய கூட்டத்தின் பிரதிநிதி கொன்றை மலர்.

ஆண்டவனுடைய சந்நிதிக்கு நல்லவர்கள் மாத்திரம் போக வேண்டும் என்பதில்லை. பிறக்கின்றபோதே நல்லவர்களாக இருந்தாலும் சரி, பிறக்கின்றபோதே கெட்டவர்களாக இருந்தாலும் சரி, பிறக்கின்ற போது நல்லவார்களாக இருந்து இடையில் ஏற்பட்ட சேர்க்கையினால் கெட்டவர்களாக மாறினாலும் சரி, ஆண்டவன் சந்நிதியை அடைந்து விட்டால் உய்வு பெற்று விடுவார்கள் என்பதை இந்த மூன்று பொருள்களும் காட்டுகின்றன.

தும்பை சூடினோன்

நான்காவது பொருள் தும்பை. அதுவும் இறைவனுடைய சிவந்த சடாடவியின்மேல் இருக்கின்றது. தும்பை மலர் ஒரே ஒர் இதழை உடையது. மலர் என்றால் மணம் இல்லாவிட்டாலும், நிறம் வேண்டும் என்பதை இன்றைய நாகரிகத்தில் பார்க்கிறோம். மணமேயில்லாத கனகாம்பரத்தை இன்று ரூபாய் போட்டு நிறுக்கிறார்கள்! நமது நாகரிகம் அப்படி வளர்ந்திருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள மலர்களுக்குத்தான் சிறந்த மணம் உண்டு. குருடனும் மலரை அநுபவிக்கும்படி உள்ளது தமிழ்நாடு. இத்தகைய தமிழ்நாட்டில் மணமுள்ள மலரை விட்டு நிற மலரைச் சூடி அநுபவிக்கிற நாகரிகம் வந்துவிட்டால் என்னவென்று சொல்வது!

மலர் என்றால் மணம் வேண்டும்; இதழ்கள் இருக்க வேண்டும்; நிறம் வேண்டும். ஆனால் தும்பை மலரைப் பார்த்தால் அதற்கு நிறம் இல்லை; இதழ்களும் இல்லை; வாசனையும் இல்லை. அதுவும் இறைவன் சடையில் இருக்கிறது.

62