பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருபாகரன்

நிறம், மணம், இதழ்கள் இல்லாத தும்பையை யார் சூடிக் கொள்வார்கள்? மணம் இல்லா விட்டாலும், நிறம் இருந்தால் சூடிக்கொள்வார்கள். நிறத்திற்காகக் காகிதப் பூவைச் சூடிக் கொள்ளுகிறார்கள் அல்லவா? ஏன் அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், "வாடா மலர்" என்கிறார்கள்! ஆனால் தும்பையை யாரும் சூடிக் கொள்வது இல்லை. அதை இறைவன் அணிந்திருக்கிறான்.

அந்த மலருக்கு மணம் இல்லாவிட்டாலும், நிறம் இல்லாவிட்டாலும், பல இதழ்கள் இல்லாவிட்டாலும் அதில் ஒன்றே ஒன்று மாத்திரம் இருக்கிறது; மென்மை.
   "மலரினும் மெல்லிது காமம்"
என்று வள்ளுவர் சொல்லுகிறார். மலருக்கு மென்மை ஓர் இயல்பு.

நிறம் இல்லாத வெள்ளைமலர் பல உண்டு. ஆனால் இவற்றுக்கு மிக்க வாசனையாவது இருக்கும். மல்லிகை, முல்லைப்பூ இல்லையா? தும்பை மலருக்கோ வாசனை இல்லை. வாசனை இல்லாவிட்டாலும் மலர் என்பதற்குரிய மென்மை இதனிடம் இருப்பதனாலேயே அதனை எம்பெருமான் ஏற்றுக் கொண்டான்.

"படாடோபம் வேண்டுவதில்லை. மந்திர ஜபம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரிய கோயில்களுக்குப் போய்த் தவம் பண்ண வேண்டுவதும் இல்லை. அன்பு என்ற ஒன்று இருந்தால் போதும், ஆண்டவன் ஏற்றுக் கொள்வான்" என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்திக் கொண்டு சின்னப் பூவாகிய தும்பை ஆண்டவன் தலையில் இருக்கிறது; கொன்றை மலருக்கு அருகில் இருக்கிறது.

ஆண்டவனுடைய செஞ்சடையில் பெரிய, அழகான, மணமுள்ள கொன்றை மலருக்கு அருகிலேயே, நிறம் இல்லாத, வாசனையற்ற தும்பை மலரும் இருக்கிறது. இதிலிருந்து எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், எவ்வளவு சிறியவனாக இருந்தாலும் இறைவன் சந்நதிதானத்திற்கு வந்து விட்டால் ஒரே நிலையை உடையவர்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

63