பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கிருபாகரன்

கல்யாணம் ஆகுமா? அதைப்போல யக்ஞத்திற்குத் தலைவனாகிய பரமேசுவரனை அழைக்காமல் மற்றவர்களை எல்லாம் அழைத்து யாகம் செய்தால் அது யாகம் ஆகாது.

தட்சன் வேள்விக்கு எல்லோரும் வந்திருந்தார்கள். சிவபெருமானுக்கு அழைப்பு இல்லையாதலால் அவன் வரவில்லை. அதனால் என்ன ஆயிற்று? மாணிக்க வாசகர் சொல்லுகிறார்:
   "சாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று"
என்கிறார். தக்கன் வேள்வியில் அவியை நுகரவில்லை. புலாவைத்தான் உண்டார்கள். தேவர்கள் தாம் வாழ அவி பெறுவது வழக்கம். இங்கேயோ அவர்கள் தாம் சாகும்படி தகரைத் தின்றார்களாம்.

ஆண்டவன் தலைமை இருந்தால்தான் வேள்வி என்று சொல்லலாம். இல்லையானால் அதனை வேள்வி என்று சொல்ல முடியாது. சிவபெருமான் வீரபத்திர உருவத்தோடு யாகசாலை சென்றான். தேவர்களுக்குத் தண்டனை அளித்தான். ஒவ்வொரு தேவனுக்கும் ஒவ்வொரு தண்டனை கிடைத்தது. சூரியனுடைய கண்ணைப் பிடுங்கினான். சந்திரனைக் கீழே தள்ளிக் காலால் தேய்த்தான்.

தூங்கிக் கொண்டிருக்கிற ஒருவருடைய வாயில் தேன் சிந்தினால் அது இனிக்காதா? கோபத்தால் ஒருவன் மேலே தேனுள்ள பாத்திரத்தை எறிந்தால் அந்தப் பாத்திரத்திலுள்ள தேன் அவன் வாயிலே தெறிக்கும்போது அந்த தேன் இனிக்காதா? அதைப்போல, ஆண்டவனுடைய கோபத்தால் சந்திரனுக்குத் தண்டனை உருவத்தில் கிடைத்தது ஒரு பெரிய லாபம். சந்திரனைக் காலால் தேய்த்தான் அல்லவா இறைவன்? அதனால் அவனுடைய திருவடி சம்பந்தம் சந்திரனுக்குக் கிடைத்தது. இறைவனுடைய திருவடியைக் காணாமல் எத்தனையோ முனிவர்கள் தவம் கிடக்க, சந்திரனுக்கு அவனுடைய திருவடி சம்பந்தம் எளிதில் கிடைத்தது. தண்டனையாக இருந்தாலும் அடியின் தொடர்புக்குப் பயன் உண்டு அல்லவா?

"அமுதக் கடலுக்கு இருவர் போனார்கள். ஒருவன் அதன் கரையில் நின்று. கொண்டிருந்தான். மற்றொருவன் அமுதக் கடலுள் வீழ்ந்துவிட்டான். வீழ்ந்தவன் கதி என்ன ஆகும்" என்று தம் மாணவர்களை ஒரு ஞானி கேட்டாராம்.

65