பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கைக்குள் என்ன என்ன பொருள்கள் இருக்கும் என்பதையும் குறிப்பாகத் தெரிந்து கொள்கிறோம்.

நம் வாழ்வில் ஏற்படுகின்ற அழுக்கு இன்னதென்று தெரிந்து கொண்டோம். அந்த அழுக்கைப் போக்குகின்ற ஆண்டவனைப் பற்றியும் தெரிந்தது. அழுக்குப் போகப் பெற்றதனால் ஏற்படுவது இன்பம் என்பதையும் அறிந்தோம். ஆனால் அந்த இன்பத்தை அருணகிரிநாதர் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது. அதை அடைவதற்கான வழியைச் சொல்ல முடியுமேயன்றி அதை அவரவர்களே அநுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். "கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்" என்று சொல்வார்கள்.

கந்தர் அலங்காரத்தில் ஆன்மாவின் இலக்கணத்தைப் பார்க்கலாம். ஆன்மா பிரபஞ்சச் சேற்றிலே உழன்று அடைகின்ற துன்பத்தைப் பார்க்கலாம். பாசம் அகலும் போது ஆன்மா, ஆண்டவனைச் சார்ந்து இன்பம் அடைகிறது என்பதைப் பார்க்கலாம். இத்தனையையும் கந்தர் அலங்காரம் என்ற நூலுக்குத் தலைவாசல் போலிருக்கின்ற முதல் பாட்டிலேயே அருணகிரிநாதர் புலப்படுத்துகிறார்.
   பேற்றைத் தவம்சற்றும் இல்லாத
     என்னைப் பிரபஞ்சம்என்னும்
   சேற்றைக் கழிய வழிவிட்ட
     வா!செஞ்ச டாடவிமேல்
   ஆற்றைப் பணியை இதழியைத்
     தும்பையை அம்புலியின்
   கீற்றைப் புனைந்த பெருமான்
     குமாரன் கிருபாகரனே!

(முன் செய்த தவத்தின் பயனையும், இப்போது செய்த தவத்தையும் சிறிதேனும் பெற்றிலாத அடியேனை, சிவந்த சடைக் காட்டில் ஆற்றையும், பாம்பையும், கொன்றை மலரையும், தும்பை மலரையும், சந்திரனது கீற்றையும் அணிந்த சிவபெருமானுடைய குமாரனும் கருணைக்கு இருப்பிடமுமாகிய முருகன் பிரபஞ்சம் என்கின்ற சேற்றினின்றும் கழியும்படியாக வழிவிட்டவாறு என்ன வியப்பு!

பெருமான் குமாரனாகிய கிருபாகரன் என்னைச் சேற்றினின்றும் கழிய வழி விட்டவா என்று கூட்டுக.

68