பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

உபதேசமாக உள்ள பாக்களைக் கற்றுக் கொள்பவன் எப்படி இருக்க வேண்டும்? தமிழ் நன்றாகக் கற்றவனாக இருக்க வேண்டும்; ஆண்டவனிடத்தில் பக்தியுடையவனாக இருக்க வேண்டும். இதைக் கந்தர் அலங்காரத்தின் இரண்டாவது பாட்டில் சொல்கிறார்.

முருகனும் தமிழும்

பாமாலையைப் பெறுபவன் முருகன். அவன் நல்ல நூலறி புலவன்; தமிழுக்குத் தெய்வம் என்று போற்றப் பெறுகிறவன்; அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தைச் சொன்ன பெருமான்.

பார்வதி கல்யாணத்தின்போது எல்லா மக்களும், எல்லாத் தேவர்களும் கயிலைக்குச் சென்றார்கள். கூட்டம் அதிகமானதால் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்து போயிற்று. பூமியைச் சமநிலையில் வைக்க எண்ணிய இறைவன் அகத்திய முனிவரைத் தென் திசைக்குப் போ என்று அருளினான். "அங்கே போனால் அந்த நாட்டு மொழி எனக்குப் புரியாதே! நான் என்ன செய்வேன்" என்று அகத்தியர் கேட்க, சிவபெருமான், "நான் சொல்லித் தருகிறேன்" என்று கூறித் தமிழைக் கற்பித்தருளினான்.

தமிழ் பேசவும், தமிழ் பேசுகிறவர்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவும் வல்லவராய் அவர் வடக்கே இருந்து தெற்கே வந்தார். இங்கே வந்த பிறகு இலக்கண அறிவைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினார். இலக்கண அறிவு இல்லாவிட்டால் ஒரு மொழியிலுள்ள குறைபாடு தெரியாது. எந்த சமயத்தில் நாம் வழுக்கிவிழுவோமோ அது தெரியாது. இலக்கண அறிவு இருப்பது யானையின் பலம் வந்தது போன்றது. உடலுக்கு எலும்பு பலம் அளிப்பது போல இலக்கணம் மொழிக்குப் பலம் அளிக்கும்.

அத்தகைய இலக்கண அறிவை அகத்திய முனிவர் வேண்ட, அதனை அவருக்கு முருகப் பெருமான் அருளினான். சிவபெருமான் அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தான்; அவர் பிள்ளையாகிய முருகன் அந்த மொழியின் இல்க்கணத்தை அவருக்கு அருளினான்.
   "குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குமரமுத்தம் தருகவே"
என்றும்,

71.