பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

எழுத்துக்கள்

மிழ் அறிவு எப்படிப் புலப்படும்? பாடும்போது நன்றாக உச்சரிக்கும் வாக்கினாலே புலப்படும். பாடலைப் பாடும்போது எழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் பராசக்தியிடமிருந்து தோன்றியது என்று பெரியவர்கள் சொல்வார்கள். 51 எழுத்துக்களுக்கும், 51 விதமான தத்துவங்கள் இருக்கின்றன. தனித்தனித் தேவதைகள் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏதேனும் ஒர் எழுத்தைத் தவறாக உச்சரித்தால் அந்த எழுத்துக்குரிய தேவதை கோபித்துக் கொள்ளும். ஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ, விலாசத்தையோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வராதா? அதுபோலவே நம் நாவிலிருந்து நடமாடுகிற தேவதைகள் தங்களுக்கு உரிய எழுத்தைச் சரியாக உச்சரிக்காவிட்டால் கோபம் அடைகின்றன. சரியாக உச்சரித்தால், அவற்றுக்குரிய இலக்கண அமைதி இருந்தால், அதனால் கிடைக்கும் நன்மையைப் பெறலாம்; தேவதைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

3

மழலையும் பேச்சும்

ழுகையே தன் மொழியாகப் பிறக்கும் குழந்தை பின்பு மழலை பேசுகிறது. வளர வளர நன்றாகப் பேசக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளின் மழலைச் சொல் இசைக் கருவிகளை விட இனிமையானது என்று வள்ளுவர் சொல்கிறார். இளங் குழந்தை மழலை பேசினால் அது குறைபாடு ஆகாது. எழுத்தைத் தவறாக உச்சரித்ததாகவும் ஆகாது. குழந்தை சோறு என்பதை, 'சோச்சி' என்கிறது. பழம் என்பதைப் 'பயம்' என்கிறது. காபி என்பதை 'காவி' என்கிறது. அவை எழுத்து குறைபாடு உடையவை; ஆனாலும் இனிமையை உடையன.
   "குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
   மழலைச்சொல் கேளாதவர்"

82