பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 முடியவில்லை என்றால் அதில் பிளந்த குறுநொய் இருக்கிறது. அதைக் கொடுக்கலாம்" என்று சொன்னால், "நிச்சயம் தரலாம்: என்று தோன்றும். இப்படி வாழ்க்கையில் நடைமுறையில் பயன் படுகிற உபதேசத்தைச் சொல்கிறார் அருணகிரியார். யாருக்குக் கொடுக்க வேண்டும்? வறிஞருக்கு. எப்பொழுது கொடுக்க வேண்டும்? எல்லாக் காலத்தும்; என்றும். காரணம் ஏன் கொடுக்க வேண்டும்? நுங்கட்கு இங்ங்ன் வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல்போல் கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே. 'நீங்கள் இவ்வுலகை விட்டு, வேறு உலகத்திற்குக் கடைசி யாகச் செய்யப் போகின்ற பிரயாணத்தில் உங்களிடம் இருக்கும் பணம் பயன்படாது. ஆகவே அந்த உலகத்தில் பயன்படக்கூடிய அருட்செல்வமாக அவற்றை எல்லாம் மாற்றிக் கொள்ள, வறிஞர் களுக்கு இப்பொழுதே கொடுங்கள்' என்கிறார். மனம் திருந்த ஆண்டவன் கோயிலுக்குப் போவதும், தர்மம் செய்வதும் மனத்தைப் பக்குவப்படுத்தத்தான். நான் என்பது அகங்காரம். என்னுடையது என்பது மமகாரம். நான் என்பது உண்டாகிப் பின்பு என்னுடையது என்பது உண்டாகிறது. நான் என்ற ஆணவம் அடங்க வேண்டும். ஆணவம் முதலில் அடங்காது. கப்புக் களைகளை எல்லாம் கழித்துவிட்டு நடுமரத்தை வெட்டுவது போல, எனது என்பதைத் தறித்துப் பின் நான் என்பதைத் தறிக்க வேண்டும். எனது என்பதைத் திடீரென்று மறந்துவிட முடியாது. எனது என்பதைப் பிறரது என்று மாற்ற வேண்டும். 'எனது, எனது' என்று சொல்லிப் பழகின மனத்தை, "என்னுடையது அல்ல" என்று மறுத்து நினைக்கச் செய்ய முடியாது. ஆனால் வெகு சுலபமாக, "எல்லாம் இறைவனுடையது' என்று நினைக்கச் செய்யலாம். 96