பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் மறந்த நிலை முறுகப் பலவகையான அநுபவங்கள் உண்டாகும். யோகம் செய்தாலும், உபாசனை செய்தாலும், துறவுள்ளத்தோடு உண்முக நோக்கிலே ஈடுபட்டாலும் இறைவன் அருள் பதியப் பதியப் புதிய புதிய அநுபவம் உண்டாகி வரும். முத்தியின்பம் என்பது முடிந்த முடிபாகிய அநுபவம். அதற்குமுன் எத்தனையோ படிகள் உண்டு. சாதனங்களை மேற்கொண்டு ஒரு காலைக்கு ஒரு கால் பயிற்சி முற்றி வரும்போது அநுபவமும் முதிர்ந்து வரும். பயிரை விளைக்கையில் நாளுக்கு நாள் பயிர் வளர்ந்து பல நிலைகளை அடைவதுபோல அநுபவம் வளரும். அறிவும் அநுபவமும் புத்தகத்தைப் படித்தும் இறைவனைப் பற்றிய செய்திகளைக் கேட்டும் பெறும் அறிவு நமக்கு இறைவன் அருளைப் பெற வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குமே யன்றி, அநுபவத்தை உண்டாக்காது. நெல்லின் வகைகளைப் பற்றியும் நெற்பயிர் விளைவிக்கும் திறத்தைப் பற்றியும் வேளாண்மையில் நேரும் இடையூறுகளைப் பற்றியும் எவ்வளவு தெரிந்து கொண்டாலும், நெல் அறுவடை செய்ய இயலாது. உழுது பரம்படித்து விதைத்துப் பயிர் செய்தால்தான் நெல்லை அறுவடை செய்யலாம். முயற்சி இல்லாமல் எந்தக் காரியமும் கைகூடாது. ஒரு கவளம் சோறு கிடைக்க வேண்டுமாயின் அதற்காக எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கிறது. அன்ன சத்திரங்களின் விலாசங்களை மாத்திரம் தெரிந்து வைத்துக் கொண்டால் சோறு நம் வாயில் வந்து விழாது. சோற்றைத் தேடி அலைய வேண்டும். அதைப் பெறுவதற்கு என்ன காரியம் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அதற்கே அப்படியானால் உயிருக்கு இன்பம் தரும் அநுபவம் எளிதில் வருமா? நூலறிவினால் அதனைப் பெற இயலாது. பல ஆண்டுகள் முயன்றும் தமக்கு இறையருள் அநுபவம் கிடைக்க வில்லையே என்று ஏங்குபவர்கள் இருக்கிறார்கள். அநுபவத்தில் பல நிலைகள் உண்டு என்று சொன்னேன். இறைவன் திருநாமத்தைச் சொன்னால் நாக்கு இனிக்கும் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். அந்த அநுபவம் நமக்குத் தெரியாது. இறைவனை நினைத்தால் மனம் இனிக்கும் என்கிறார்கள். அது மற்றோர் அநுபவம். 1O7